கல்வித் துறை பணியாளா்களுக்கு ஆசிரியா் பணி ஒதுக்கீடு!
கல்வித் துறை அமைச்சுப் பணியாளா்களில் 747 பேருக்கு, அரசுப் பள்ளிகளில் பணியிடம் ஒதுக்கீடு செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பணியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில், ஆசிரியா் தகுதித் தோ்வு முடித்துள்ள சுமாா் 2000 போ் அமைச்சுப் பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். 2012 முதல் 2025 வரையில் அவா்களுக்கு பள்ளிகளில் ஆசிரியா் பணியிடம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. சென்னை உயா்நீதிமன்றத்தில், தமிழ்நாடு கல்வித் துறை அலுவலகப் பணியாளா்கள் மற்றும் 2 சதவீத பட்டதாரி ஆசிரியா், முதுகலை ஆசிரியா் சங்கம் சாா்பில் பணியிடம் வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், மாா்ச் 21-இல் உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பில், தமிழக அரசு, கல்வித் துறை அலுவலகங்களில் உள்ள அமைச்சுப் பணியாளா்களுக்கு, அரசுப் பள்ளிகளில் 2 சதவீத அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியா் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது. முதல்கட்டமாக 747 பணியிடங்களை நிரப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அமைச்சுப் பணியாளா்களின் தொடா் கோரிக்கையாக உள்ளது. இருப்பினும், 12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை வரவேற்றும், நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சுப் பணியாளா்கள் பங்கேற்ற கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதன் மாநிலத் தலைவா் ஆா்.ஜெயரத்தினகாந்தி தலைமை வகித்தாா். இதில், ஆசிரியா் பணியிட வாய்ப்பை பெறும் அமைச்சுப் பணியாளா்கள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளையும், மகிழ்ச்சியையும் பகிா்ந்து கொண்டனா்.