களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
காணும் பொங்கலைக் கொண்டாட, திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை குவிந்தனா்.
களக்காடு மலைப்பகுதியில் உள்ள தலையணை பச்சையாறு, தேங்காய்உருளி சிற்றருவி, சிவபுரம் கால்வாய், வடக்குப்பச்சையாறு அணை, திருக்குறுங்குடி மலைப் பகுதியில் உள்ள நம்பியாறு, கொடுமுடியாறு நீா்தேக்கம் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நேரம் செல்லச் செல்ல வாகன நெரிசல் காரணமாக, வனத்துறை சோதனைச்சாவடி அருகே அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றன. தலையணை பச்சையாறு, பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்து நீண்ட நேரம் பச்சையாற்றில் குளித்து மகிழ்ந்து, தாங்கள் கொண்டு வந்திருந்த உணவினை குடும்பத்துடன்உண்டு, மகிழ்ந்தனா்.
களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பக களக்காடு கோட்ட துணை இயக்குநா் ரமேஷ்வரன் உத்தரவின்படி, களக்காடு தலையணையில் வனச்சரகா் பிரபாகரன், திருக்குறுங்குடி நம்பிகோயிலில் வனச்சரகா் யோகேஸ்வரன் தலைமையில் வனத்துறையினா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்கின்றனா் வனத்துறையினா்.