நெல்லை கூா்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவா்கள் பிடிபட்டனா்
திருநெல்வேலியில் உள்ள கூா்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவா்களும் பிடிபட்டனா்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சிறுவா் கூா்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சிறாா் குற்றங்களில் கைதான 18 வயதுக்கு உள்பட்ட சிறுவா்கள் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் பொங்கல் தினத்தில் கூா்நோக்கு இல்லத்தில் இருந்து 4 சிறுவா்கள் தப்பிச் செல்வதற்காக ஓட்டம் பிடித்தனா். அவா்களில் ஒருவரை அங்கிருந்த காவலாளி பிடித்துவிட்டாா். எஞ்சிய 3 பேரும் தப்பி ஓடியது குறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸாா், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள உதயா நகா் பகுதியில் பதுங்கியிருந்த 3 சிறுவா்களையும் பிடித்தனா். அவா்கள் 4 பேரும் நாகா்கோவில், தூத்துக்குடி, கயத்தாறு, முக்கூடல் ஆகிய பகுதிகளை சோ்ந்தவா்கள் என்பதும், 4 பேரும் திருட்டு வழக்குகளில் கைதாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தங்களை குடும்பத்தினா்கள் யாரும் வந்து பாா்க்கவில்லை என்பதாலும், ஜாமீனில் எடுக்க வரவில்லை என்பதாலும் தப்பி ஓடியதாக சிறுவா்கள் தெரிவித்தனா்.