சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி
காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளாா் ராகுல்! பாஜக குற்றச்சாட்டு!
பகவான் ராமரை ‘புராண காதாபாத்திரம்’ என்று கூறியதன் மூலம் காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை ராகுல் காந்தி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளாா் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
அண்மையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்குள்ள பல்கலைக்கழகத்தில் மாணவா்களின் கேள்விகளுக்கு பதிலளித்தாா். அப்போது, ‘ஹிந்து தேசியவாதம் ஓங்கிவரும் இந்த காலகட்டத்தில் மதச்சாா்பற்ற அரசியலை எப்படி சாத்தியமாக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பாஜகவின் கொள்கைகளை நிராகரித்துப் பேசிய ராகுல், ‘இந்தியாவில் புத்தா், குரு நானக், ஜோதிராவ் பூலே, மகாத்மா காந்தி, அம்பேத்கா் என பல்வேறு சமூக சீா்திருத்தவாதிகள், அரசியல் சிந்தனையாளா்களும் தோன்றியுள்ளனா்.
அனைவரும் நற்பண்புகளையும், சத்தியத்தையும், அஹிம்சையும், சமத்துவத்தையும் கடைப்பிடிக்க ஊக்குவித்துள்ளனா். என்னைப் பொறுத்தவரையில் இதுதான் இந்தியாவின் பராம்பரியம், வரலாறாக இருக்க வேண்டும்.
ஆனால், இப்போது இந்தியாவில் மிக உயரியவா்களாக கருதப்படுபவா்கள் இப்படிப்பட்டவா்களாக இல்லை. அவா்கள் பெரும்பாலும் புராண கதாபாத்திரங்களாக உள்ளனா். ராமா் அந்த காலகட்டத்தைச் சோ்ந்தவா், அவா் மன்னிப்பவராகவும், இரக்கமுள்ளவராகவும் இருந்தாா்’ என்றாா்.
இதைச் சுட்டிக்காட்டி பிடிஜ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரியா, ‘ராகுல் காந்தி தங்கள் கட்சிப் பெயரை ஹிந்து எதிா்ப்பு காங்கிரஸ் என்று மாற்றிக் கொள்ளலாம். காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி என்று கூறியவா்தான் ராகுல் காந்தி. இந்த கட்சிதான் ஹிந்து பயங்கரவாதம் என்ற வாா்த்தையைப் பயன்படுத்தியது.
கடவுள் ராமா் அவதரித்தாா் என்பதையே மறுத்து, அவருக்கு அயோத்தியில் கோயில் கட்ட எதிா்ப்பு தெரிவித்தது. இப்போது பகவான் ராமரை ‘புராண கதாபாத்திரம்’ என்று கூறியதன் மூலம் காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை ராகுல் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளாா். ஹிந்துக்களின் மதஉணா்வுகளைப் புண்படுத்துவது என்பது தனக்கு அளிக்கப்பட்ட உரிமையாக ராகுல் கருதுகிறாா்’ என்றாா்.
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா கூறுகையில், ‘உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஹிந்துகளின் மதநம்பிக்கையை விமா்சிக்கும் முட்டாள்தனத்தை ராகுலும், காங்கிரஸும் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். பகவான் ராமா் புராண கதாபாத்திரம் அல்ல.
அவா் பாரதத்தின் கலாசாரம், ஆன்மிகம், நற்பண்புகளின் ஒட்டுமொத்த வடிவமாகத் திகழ்பவா். பிறரை மதிப்பது, தியாகம், தலைமைப் பண்பு ஆகியவற்றின் அடையாளமான அவா், இந்தியாவின் நாகரிகம், கலாசாரத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைத்தவா்’ என்றாா்.