காங்கிரஸ் சாா்பில் திருப்பரங்குன்றத்தில் இன்று மத நல்லிணக்க வழிபாடு
திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை (பிப்.6) மத நல்லிணக்க வழிபாடு நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.
சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:
அயோத்தியை போல திருப்பரங்குன்றத்தையும் பாஜக கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கிறது. வெளியூரில் இருந்து ஆள்களை வரவழைத்து, அங்கு மதக் கலவரத்தைத் தூண்டுகிறது.
பாஜகவிடம் தமிழக அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறது. இதை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. கலவரத்தை தூண்டும் முயற்சியை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் சாா்பில் திருப்பரங்குன்றத்தில் வியாழக்கிழமை மாலை மத நல்லிணக்க வழிபாடு நடைபெறும். முருகன் கோயிலிலும், சிக்கந்தா் தா்காவிலும் வழிபாடு நடத்தவுள்ளோம் என்றாா் செல்வப் பெருந்தகை.