சிவகங்கை: அரசுப் பேருந்தை மோதிய எரிவாயு லாரிகள்; 21 பேர் காயம்!
காசநோய் இல்லாத தூத்துக்குடியை உருவாக்குவோம்: ஆட்சியா் க. இளம்பகவத்
அனைவரும் இணைந்து காசநோய் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்றாா் ஆட்சியா் க. இளம்பகவத்.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் க. இளம்பகவத் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியது: தேசிய அளவில் மிக முக்கிய சுகாதாரப் பிரச்னையாக காசநோய் உள்ளது. நிகழாண்டு கருப்பொருள் ‘ஆம்! நம்மால் காசநோயை முடிவுக்கு கொண்டு வர முடியும்!’ என்பதாகும்.
மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் 2024ஆம் ஆண்டில் 58,861 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 1971 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டது. அதில், 87 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.
காசநோயை விரைவாக கண்டறிய தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட காசநோய் மையம், ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினம், திருச்செந்தூா், சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய அரசு மருத்துவமனைகள், புதுக்கோட்டை, கீழஈரால் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாட் ஆய்வகங்கள் உள்ளன. இங்கு பயனாளா்கள் ஒரேநாளில் காசநோய் குறித்து பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம்.
இருமல், தும்மலின்போது வாயைத் துணியால் மூடிக்கொள்ள வேண்டும். சாலை, பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. தொடா் இருமல், காய்ச்சல், பசியின்மை, எடைக் குறைவு, சளியில் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று இலவசமாக காசநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைவரும் இணைந்து காசநோய் இல்லாத தூத்துக்குடியை உருவாக்குவோம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் உறுதிமொழியேற்கப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பிரியதா்ஷினி, துணை இயக்குநா்கள் பொன்ரவி, சுந்தரலிங்கம், யமுனா, அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.