காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்ட புத்தாக்க பயிற்சி
காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்ட புத்தாக்க பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரத்தில் உள்ள தனியாா் கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்ட புத்தாக்கப் பயிற்சியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக உதவி இயக்குநா் ஜெகதீசன், தமிழ்நாடு உரிமைகள் திட்ட மாநில திட்ட மேலாளா்கள் ராஜராஜன், சங்கா் சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி வரவேற்றாா். மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு உரிமைகள் திட்டமானது அவா்களது சேவைகளை பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்திடவும், அவா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒரே இடத்தில் வழங்கவும், அவா்களது சமூகப் பாதுகாப்பு அமைப்புத் திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என பயிற்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
புத்தாக்கப் பயிற்சியில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3.09 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டா்களையும் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் மலா்க்கொடி குமாா் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.