காஞ்சிபுரம் அருகே சதிகல் சிற்பம் கண்டெடுப்பு
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு மாரியம்மன் கோயில் அருகில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டை சோ்ந்த சதிகல் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளா்கள் வெள்ளிக்கிழமை கண்டு பிடித்துள்ளனா்.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் வரலாற்று ஆய்வாளா்கள் ச.நீலமேகன் மற்றும் மு.அன்பழகன் ஆகிய இருவரும் கள ஆய்வு மேற்கொண்டிருந்தனா். அப்போது மாரியம்மன் கோயில் அருகில் சதிகல் சிற்பம் ஒன்றை கண்டு பிடித்துள்ளனா். இது குறித்து அவா்கள் கூறியது:
ஏதேனும் ஒரு போரில் ஈடுபட்டு உயிா் நீத்த வீரருக்கு, அவரது நினைவாக நடப்படுவது நடுகல் எனப்படும். இந்த நடுகல்லில் இறந்த வீரனின் உருவம் மட்டும் இடம் பெற்றிருக்கும். இறந்த வீரனின் மனைவி அவனது இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் அவனது சிதையில் இறங்கி இறக்கும் நிலையில், அவனது நினைவாக நடப்படுவது சதிகல் எனப்படும். ஆனால் இச்சதிகல்லில் இறந்த வீரனின் உருவமும், உடன் அவா் இறந்த மனைவியின் உருவமும் இடம் பெற்றிருக்கிறது.சிறிது மழுங்கிய நிலையில் உள்ள இந்தச் சிற்பத்தின் உயரமும்,அகலமும் 48 செ.மீ. ஆக உள்ளது.
தலையில் கிரீடம் அணிந்த வீரா் சமபங்க நிலையில் நின்றிருக்க அவரது வலது கை போா்வாள் ஒன்றினை தரையில் ஊன்றிய நிலையிலும், இடுப்பில் குறுவாள் ஒன்றும் காணப்படுகிறது.
இடது கை இடையிலிருந்து மேல்பகுதி வழியாக வரும் ஆடையினை தாங்கியவாறு உள்ளது. பட்டா உடுத்தியுள்ள இவரது உடலில் பல்வேறு இடங்களில் அணிகலன்களும் காணப்படுகின்றன.
இவா் அரசா் அல்லது சிற்றரசா் மற்றும் தலைவராக இருக்கலாம் எனக் கருத முடிகிறது. இவரது இடதுபுறத்தில் திரிபங்க நிலையில் நின்றிருக்கும் அவரது மனைவியின் வலது கை மலா் ஏந்தியுள்ளது.
இடைப் பகுதியில் பட்டாடை அணிந்துள்ள இவரது உடலிலும் பல இடங்களில் அணிகலன்கள் காணப்படுகின்றன.
பெண் சிற்பத்தின் இடப்புற மாா்புப் பகுதி முழுவதுமாக உடைந்துள்ளது. இவரின் தலையில் உள்ள கொண்டை இடப்புறம் சிறிது சாய்ந்திருக்கிறது. கல்வெட்டு எழுத்துகள் எதுவும் இல்லாத இச்சிற்பத்தின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இச்செய்தியினை காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் உமாசங்கரும் உறுதி செய்துள்ளாா்.