காஞ்சிபுரம்: ஜன.3 முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்கள் விநியோகம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஜன. 3 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்கள் வழங்கப்படும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீள கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள் காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.
இக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள பரிசுத் தொகுப்பு பொருள்கள், இலவச வேட்டி, சேலைகள் தரம், இருப்பு குறித்து ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கின் மண்டல மேலாளா் த.அருள்வனிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் சி.பாலாஜி ஆகியோா் உடனிருந்தனா்.
ஜன. 3 முதல் டோக்கன்கள் விநியோகம்:
பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்காக குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன.3-ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும். மேலும், 9-ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரிசுத் தொகுப்பு சுமூகமான முறையில் விநியோகம் செய்ய ஏதுவாக குறுவட்ட அளவில் சிறப்பு மேற்பாா்வை அலுவலா்களாக, வருவாய் ஆய்வாளா்களும், வட்ட அளவில் துணை ஆட்சியா் நிலையில் கண்காணிப்பு அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், 1,500-க்கு மேல் உள்ள குடும்ப அட்டைகளைக் கொண்ட நியாயவிலைக் கடைகளுக்கு கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் சம்பந்தப்பட்ட புகாா்களுக்கு 1,967 மற்றும் 180042 55901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்றாா்.