NEEK : `கண்ணில் கனவோடு காத்துட்டு இருக்காங்க; படம் ஜாலியாக இருக்கும்..' - இயக்கு...
'காந்திக்கே கார்ட்டூன் வரைந்திருக்கிறார்கள்; நீதிமன்றத்தில் மத்திய அரசு தோற்கும்!' - இந்து என்.ராம்
விகடன் ப்ளஸ் இதழில் வெளியான அரசியல் கார்ட்டூனை தொடர்ந்து மத்திய அரசு விகடனின் இணையதளத்தை முடக்கியிருக்கிறது. அரசின் இந்த ஏதேச்சதிகார போக்கை பல தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். விகடனுக்காகவும் பத்திரிகை சுதந்திரத்துக்காகவும் குரல் எழுப்பியிருப்பவர்களின் மிக முக்கியமானவர் இந்து என்.ராம். விகடன் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை அரசியலமைப்பை மீறிய பழி வாங்கும் நடவடிக்கை என கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார். இந்நிலையில், விகடன் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல் குறித்து என்.ராம் அவர்களிடம் இன்னும் விரிவாக பேசினோம்.

"விகடன் ப்ளஸ் இணைய இதழில் வெளியான அந்த கார்ட்டூனை நீங்களும் பார்த்திருப்பீர்கள். முதலில் அந்த கார்ட்டூனை பற்றிய உங்களின் அபிப்ராயத்தை சொல்லுங்களேன்."
"அது ஒரு சிறந்த கார்டூன். நையாண்டிமிக்கதாக இருந்தாலும் அதில் அர்த்தமும் இருந்தது. பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பே பிப்ரவரி 10 ஆம் தேதி விகடன் ப்ளஸ் இதழில் அந்த கார்டூன் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து இராணுவ விமானத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர்கள் இங்கே அழைத்துவரப்படுவதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகளும் அதைப் பற்றி பேசியிருக்கின்றன. ஆனால், நம்முடைய அரசால் அதை பிரச்சனையாக்கி அமெரிக்காவுடன் பேச முடியவில்லை. அமெரிக்க பயணத்துக்கு முன்பாகவே பிரதமர் கையறு நிலையில்தான் இருந்தார். அதை குறிக்கும் வகையில்தான் அந்த கார்டூனும் வரையப்பட்டிருக்கிறது. அது யாரையும் இழிவுப்படுத்தும் நோக்கத்திலெல்லாம் இல்லை. பழைய தலைவர்களெல்லாம் ஜனநாயகத்தன்மையோடு நடந்துகொள்வார்கள். கிருஷ்ணமேனன், நேரு போன்றவர்களை பற்றியே கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டிருக்கிறது."

"நேருவை விமர்சித்தே கேலிச்சித்திரங்கள் வெளியாகியிருக்கிறது என்கிறீர்கள். ஆனால், இன்றைக்கு பிரதமரை எப்படி விமர்சிப்பீர்கள் என பதில்வாதம் வைக்கிறார்களே?"
"அதுதான் இங்கே நிகழ்ந்திருக்கும் மாற்றம். அதிகார மமதையில் எல்லாவற்றையும் செய்கிறார்கள். தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அந்த காலத்து தலைவர்களிடம் சகிப்புத்தன்மை இருந்தது. நான் கார்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மணனின் ரசிகன். அவர் காந்தியை பற்றியே கார்டூன் வரைந்திருக்கிறார். அதை வாங்கி என் அலுவலகத்தில் மாட்டி வைத்திருக்கிறேன். முன்பிருந்த தலைவர்கள் பெருந்தன்மைமிக்கவர்களாக இருந்தனர். அவர்களை பற்றி வெளியாகும் கார்டூன்களை அவர்களே ரசிப்பார்கள். குடும்பத்தினரிடமெல்லாம் காட்டி மகிழ்வார்கள். ட்ரம்பை சர்வாதிகாரி என்கிறோம். ஆனால், அவர் கூட ஒரு கார்டூனுக்கு இப்படியான எதிர்வினைகளை ஆற்றிருக்க மாட்டார். பத்திரிகை சுதந்திரத்தை இணையத்திலும் மழுங்கடிக்கும் வேலையை இவர்கள் செய்திருக்கிறார்கள். விகடன் அடுத்த ஆண்டில் நூற்றாண்டை கொண்டாடவிருக்கிறது. அதற்கென தனி மதிப்பும் மரியாதையும் பத்திரிகை உலகில் இருக்கிறது. விகடனின் நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன் இணையத்தில் விகடனுக்காக பெரிய அடித்தளத்தை முன்பே அமைத்துவிட்டார். டிஜிட்டல் உலகில் விகடன் முன்பே பரந்துபட்டு இயங்க ஆரம்பித்துவிட்டது. அப்படியிருக்க அவர்களின் வணிகத்தை மொத்தமாக முடக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். முடக்க நடவடிக்கையை எந்த முறையில் எடுத்திருக்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், நோட்டீஸ் வழங்காமல் எந்த செயல்முறையையும் பின்பற்றாமல் தளத்தை முடக்கியிருக்கிறார்கள். தகவல் தொடர்பு விதிகள் 2021ஐ பின்பற்றியிருக்க வேண்டும்."
"அதையெல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. முடக்கம் செய்து 24 மணி நேரம் கழித்து தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடமிருந்து ஒரு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அடுத்த ஒரு நாளில் உங்கள் தரப்பு வாதத்தை எங்களிடம் முன்வைக்கலாம் எனவும் கூறியிருக்கிறார்கள். நியாயமே இல்லாத நடவடிக்கை இது. ஆனால், விகடனுக்கு இது ஒன்றும் புதிதில்லை. 1987 இல் என்னுடைய நண்பர் பாலச்சுப்பிரமணியனை அப்போதைய எம்.ஜி.ஆர் ஆட்சியில் இதேபோல விகடனில் வெளிவந்த கார்டூனுக்காக கைது செய்தார்கள். இத்தனைக்கும் அது வாசகர்கள் கொடுத்த ஐடியாவில் வெளியான கார்டூன். இரண்டு எம்.பி, எம்.எல்.ஏ க்களை திருடனாகவும் கொள்ளைக்காரனாகவும் சித்தரித்து அந்த கார்டூன் வரையப்பட்டிருக்கும். அதை பிரச்சனையாக்கி பாலசுப்பிரமணியத்தை கைது செய்தார்கள்.

அந்த விவகாரமும் தேசிய அளவில் பேசப்பட்டது. எம்.ஜி.ஆர் சுதாரித்துக் கொண்டு இரண்டே நாளில் பாலசுப்பிரமணித்தை விடுவித்து விட்டார். அந்த வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமானது. 1994 இல் அந்த வழக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என குறிப்பிட்ட நீதிமன்றம் விகடனுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டது. அதன்படி 1000 ரூபாயை பாலசுப்பிரமணியன் நஷ்ட ஈடாக பெற்றார். அந்த 1000 ரூபாயை ப்ரேம் போட்டு இன்னும் விகடன் அலுவலகத்தில் மாட்டி வைத்திருக்கிறார்கள். அது காலத்துக்கும் மிக முக்கியமான மெசேஜை கடத்திக் கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையெல்லாம் கூட இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து ரிப்போர்ட் செய்திருந்தனர். இப்போது இவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கை மோசமான முன்னுதாரணமாக மாறக்கூடும். ஒருவரை எனக்கு பிடிக்கவில்லையென்றால் டிஜிட்டலில் அவரை முழுமையாக முடக்க முடியும் என காட்டியிருக்கின்றனர். மேலும், இதில் மக்களின் தகவல் அறியும் உரிமையும் பாதிக்கப்படுகிறது. அடிப்படை கருத்துரிமைகளை உறுதிசெய்யும் அரசியலமைப்புச் சட்டம் 19(1)a க்கு எதிரானது. மேலும், 19(2) பிரிவின் படி நியாயமான காரணங்களுக்காக முடக்கங்களையும் கட்டுப்பாடுகளையும் அரசு விதிக்க முடியும். ஆனால், அதற்கும் ஒரு 8 காரணிகள் உண்டு. அதனடிப்படையில்தான் செய்ய முடியும். இவர்கள் அதையும் பின்பற்றவில்லை. இது அரசியலமைப்பை மீறிய செயல்."
"அண்ணாமலை புகார் கொடுத்தார் என்பதற்காக ஒரு ஊடகத்தை முடக்குகிறார்கள். பா.ஜ.க என்கிற கட்சியின் அபிலாஷைகளுக்கு அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?"
"அண்ணாமலை மட்டுமா? ஆளுநர் ஆர்.என்.ரவி கூட அப்படித்தானே இருக்கிறார். பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸூம் செய்ய வேண்டிய வேலைகளை அவர் செய்துகொண்டிருக்கிறார். கட்சிக்கும் அரசுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறதென்றே தெரியவில்லை. Alice's Adventures in Wonderland நூலில் Queen of Hearts, 'Sentence First, Verdict Afterwards.' என்பார். முதலில் தண்டனையை கொடுத்துவிட்டு அதன்பிறகுதான் விசாரணையே நடத்துவார்கள். அதைத்தான் இப்போது மத்திய அரசும் செய்திருக்கிறது. இந்த விஷயத்தில் எனக்கு அந்த நூல்தான் நியாபகத்துக்கு வருகிறது."

"ஊடகங்களின் கருத்துச்சுதந்திரங்களில் தலையிடும் நிகழ்வு தொடர்ந்துகொண்டே இருக்கிறதே. இந்த போக்கு கவலையளிப்பதாக இருக்கிறதே!"
"1988 இல் ராஜீவ் காந்தி ஆட்சியில் இருந்தபோது போபர்ஸ் ஊழலை பற்றி பத்திரிகைகள் வெளிப்படையாக எழுதிக் கொண்டிருந்தன. அப்போது அவர்களை முடக்கும் வகையில் ராஜீவ் காந்தி சட்டத்திட்டங்களை வலுப்படுத்தினர். அந்த சமயத்தில் அத்தனை பத்திரிகையாளர்களும் தெருவில் இறங்கி போராடினார்கள். 2003 இல் ஜெயலலிதா ஆட்சியில் தி இந்துவை சேர்ந்த 5 சீனியர்களை கைது செய்ய முயன்றார்கள். நாங்கள் அவர்களிடம் சிக்கவில்லை. அப்போதும் இந்தியா முழுவதுமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.
ஒரு பத்திரிகை பாதிக்கப்படும்போது போட்டி மனப்பான்மையையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு எது நியாயம் எது அநியாயம் என்பதை அறிந்து அனைவரும் இறங்கி போராட வேண்டும். இந்த விவகாரத்தில் விகடனுக்கு எல்லா தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்திருக்கிறது. நீதிமன்றத்தில் அரசு தோற்கடிக்கப்படும் என்கிற நம்பிக்கை முழுமையாக இருக்கிறது."
பேட்டி எடுத்தவர் : வெங்கட்
எழுத்தாக்கம் : உ.ஸ்ரீ