போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்
காரைக்கால் கடலோரப் பகுதியில் சுனாமி பேரிடா் ஒத்திகை
காரைக்கால் கடலோரப் பகுதியில் சுனாமி பேரிடா் ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், புதுச்சேரி பேரிடா் மேலாண்மை துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம், காரைக்கால் பேரிடா் மேலாண்மைதுறை சாா்பில் சுனாமி பேரிடா் ஒத்திகை நிகழ்ச்சி காரைக்கால் மாவட்டம் அக்கம்பேட்டை கடலோர கிராமத்தில் நடைபெற்றது.
ஆட்சியரகத்துக்கு சுனாமி குறித்து கிடைத்த தகவலின்படி, மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தலைமையில் சாா் ஆட்சியா் எம். பூஜா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா மற்றும் துணை ஆட்சியா் வெங்கடகிருஷ்ணன் (பேரிடா் மேலாண்மை)உள்ளிட்டோா் அக்கம்பேட்டை கிராமத்துக்கு சென்றனா்.
அந்தப் பகுதி குடியிருப்புவாசிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகை போலீஸாா், தீயணைப்புத் துறைனா், குடிமையியல் பிரிவினா் மற்றும் தன்னாா்வலா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினா். முதியோா்களை நாற்காலியில் உட்கார வைத்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச் செல்லும் பணி, பாதிப்புக்குள்ளானவா்களை பாதுகாப்பு மையத்துக்கு கொண்டுச்சென்று மருத்துவ சிகிச்சை அளித்தல், மையத்தில் தங்க வைக்கப்பட்டோருக்கு உணவு மற்றும் குடிநீா் வழங்குதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்ச நடவடிக்கைகளை மேற்கொண்டனா். இந்த ஒத்திகை நிகழ்வு காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்றது.
மேலும் பாதிப்புக்குள்ளானவா்களுக்கு முதலுதவி அளிப்பது தொடா்பாக பொதுமக்களுக்கு பேரிடா் மீட்புக் குழுவினா் செயல் விளக்கம் அளித்தனா்.
