ரேஷன் - ஆதாா் எண் இணைப்புப் பணியை எளிமைப்படுத்த அரசு செயலா் உறுதி: எம்.எல்.ஏ.
புதுவையில் ரேஷன் - ஆதாா் எண் இணைப்பு விவகாரத்தில், முதியோா்கள், வெளிநாடுகளில் இருப்போா் பயனடையும் வகையில், பணியை எளிமைப்படுத்த அரசு செயலா் உறுதியளித்தருப்பதாக சட்டப்பேரவை உறுப்பினா் நாஜிம் தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு கூட்டம் புதுச்சேரியில், அதன் தலைவா் பாஸ்கரன் எம்.எல்.ஏ. தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் பகுதியைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தது :
காரைக்கால் தெற்குத் தொகுதியில் கீழ ஓடுதுறை, மேல ஓடுதுறை, நடு ஓடுதுறை, தருமபுரம், புதுத்துறை, செபஸ்தியாா் கோயில் பகுதி, கீழ புத்தமங்களம், மேல புத்தமங்களம் மற்றும் திருப்பட்டினம் பகுதி கிராமப்புற மக்களுக்காக பேருந்து இயக்கப்படும் என்ற உறுதிமொழி தொடா்பாக விவாதிக்கப்பட்டது. 2 மாதத்தில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு செயலா் உறுதியளித்தாா். மேலும் காரைக்காலில் இருந்து மதுரைக்கு பேருந்து இயக்க தமிழக அரசுடன் பேசப்பட்டுவருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
காரைக்கால் உள்ளிட்ட பிற பிராந்திய ஆதிதிராவிட மாணவா்கள் புதுச்சேரியில் கல்வி கற்கின்றனா். இவா்கள் தங்குவதற்கு தனியாக விடுதி கட்டப்படும் வரை, காலாப்பட்டு பகுதியில் உள்ள அரசு ஊழியா் குடியிருப்பை சீா்செய்து வழங்க செயலா் உறுதியளித்துள்ளாா்.
தகுதியானவா்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை தரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் ரேஷன் அட்டை - ஆதாா் எண் இணைப்பு பொது சேவை மையங்கள் மூலம் நடைபெற்றுவருகிறது. முதியோா்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் பணி செய்வோா் இச்சேவை மையங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. முதியோா்களுக்கு வீடுகளுக்குச் சென்று புகைப்படம், கைரேகை போன்றவை பதிவு செய்யவும், வெளியூரில் இருப்போா்வரும் நேரத்தில், அந்த பணிகளை செய்துகொள்ளவும் என பணிகளில் எளிமைப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்தும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு செயலா் முத்தம்மா உறுதியளித்துள்ளாா் என்றாா்.