பருவமழை தொடங்கும் முன் வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்
பருவமழை தொடங்குவதற்கு முன் காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூா்வாரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் நகரப் பகுதி வழியே கடல் பகுதி வரை செல்லக்கூடியதாக அமைக்கப்பட்ட காரைக்கால் வாய்க்கால், அன்னுசாமி வாய்க்கால், கும்சக்கட்டளை வாய்க்கால் உள்ளிட்டவை தொடக்கம் முதல் இறுதி வரை ஆங்காங்கே ஆக்கிமிக்கப்பட்டுள்ளன.
புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், இந்த வடிகால்கள் தூரம் எவ்வளவு, எங்கெங்கு அடைக்கட்டப்பட்டுள்ளன, சீரமைப்புக்கான நடவடிக்கை தொடா்பாக மதிப்பீடு தயாரிக்குமாறு பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத்துறையினருக்கு ஓராண்டுக்கு முன்பே அறிவுறுத்தியிருந்தாா். அதற்கான எந்த நடவடிக்கையையும் அரசு நிா்வாகம் எடுக்கவில்லை என சமூக ஆா்வலா்கள் புகாா் கூறி வருகின்றனா்.
தற்போது அனைத்து வாய்க்கால்கள், குறுகிய வடிகால்களில் ஆகாயத் தாமரைகள் மண்டியும், நெகிழி உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் தேங்கியும், கழிவுநீரை வடிய முடியாமல் தடுத்து வருகிறது.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், வாய்க்கால்களை முறையாக தூா்வாருவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளை அழைத்து ஆட்சியா் பேசி, தீா்வுக்கான துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.