காரையாறு வனப் பகுதியில் ஆண் யானைகள் மோதல்: ஒரு யானை உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் காரையாறு வனப்பகுதியில் இரு ஆண் யானைகளிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு யானை உயிரிழந்தது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக் கோட்டம் வட்டப்பாறை வனக்காவல் பகுதி, பழையத் தோட்டப் பகுதியில் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் வியாழக்கிழமை (மாா்ச் 27) முகாம் பணிக்குச் சென்றனா். அப்போது, ஆண் யானை இறந்துகிடந்ததைப் பாா்த்த அவா்கள், அம்பாசமுத்திரம் துணை இயக்குநருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதையடுத்து, வனத்துறை கால்நடை மருத்துவா் எஸ். மனோகரன், கால்நடை உதவி ஆய்வாளா் ஆா். அா்னால்ட் வினோத், திருநெல்வேலி கால்நடை-ஆராய்ச்சி நிலைய உடற்கூறியல் துறைத் தலைவா்-பேராசிரியா் எஸ். முத்துகிருஷ்ணன், விக்கிரமசிங்கபுரம் கால்நடை மருத்துவா் சிவமுத்து உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் அம்பாசமுத்திரம் உதவி வனப் பாதுகாவலா் (பயிற்சி) ஏ. குணசீலி தலைமையில் முண்டந்துறை வனச் சரகா் சி. கல்யாணி, கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளைத் தலைவா் வினோத், மாநில வன உயிரின வாரிய நிலைக்குழு உறுப்பினா் சோ்வலாறு காணிக்குடியிருப்பு சாவித்திரி ஆகியோருடன் வெள்ளிக்கிழமை அங்கு சென்றனா்.
இறந்துகிடந்த யானையின் பாகங்கள் சேகரிக்கப்பட்டன. கால்நடை மருத்துவக் குழு, வனப் பணியாளா்கள் களஆய்வு மேற்கொண்டனா்.
இந்த யானை மற்றோா் ஆண் யானையுடனான மோதலில் காயமடைந்து இறந்ததாக, கால்நடை மருத்துவா்களின் முதல்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானையின் பாகங்கள் கூறாய்வு செய்யப்பட்டு, அதன் அறிக்கை உயரதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.