மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் -கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி
கார் ஓட்டும்போது கருப்பு நிற ஷர்ட் அணியக்கூடாதா?
பொதுவாகவே வாகன ஓட்டிகளுக்கு பல விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும், இல்லாவிட்டால் அபராதம் விதிக்கும் நிலை நடைமுறையில் உள்ளது.
ஆனால், கார் ஓட்டும்போது கருப்பு நிற ஷர்ட் அணியக் கூடாது, அணிந்தால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இது சாலை விதிமுறை அல்ல... சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. அதாவது, கார் ஓட்டும்போது, கருப்பு நிற சட்டை அல்லது டி-ஷர்ட் அணிவதால் சாலையோரங்களில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு கேமராக்களால், நீங்கள் அணிந்திருக்கும் சீட் பெல்ட்டை அடையாளம் காண முடியாமல் போகலாம். இதனால், சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி, தேவையின்றி ரூ.1,000 அபராதம் விதிக்கப்படலாம் என்கின்றன தகவல்கள்.
கருப்பு மற்றும் அடர் நிற ஆடைகளை அணிந்திருப்பவர்கள், சீட் பெல்ட் அணிந்திருப்பதை, சில சிசிடிவி கேமராக்களால் தனித்துக் கவனிக்க முடியாமல் போவதாகவும், அதனால் அ பராதம் விதிக்கப்படுவதாகவும் கடந்த காலங்களில் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.
தற்போது, சாலை விதிகளை, வாகன ஓட்டிகள் பின்பற்ற வைப்பதில், கேமராக்கள்தான் முக்கியப் பங்காற்றுகின்றன. ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினால், பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் வந்தால், புகைப்படத்துடன் வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்படும் தகவல் வந்துவிடுகிறது.
இதனால்தான், தானியங்கி கேமரா வசதியுடன் அபராதம் விதிக்கப்படும் வசதி கொண்ட பகுதிகளில் அடர்நிற ஆடை அணிந்திருப்பவர்களுக்குத் தேவையற்ற அபராதங்கள் விதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது.
அண்மையில், இதுபோன்று தவறாக அடையாளம் காணப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டதாக, தானியங்கி கேமராக்கள் அதிகம் இருக்கும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் புகார் அளித்திருந்தனர்.
அதாவது, சீட் பெல்ட் நிறமும், அணிந்திருக்கும் கோட் அல்லது ஷர்ட் நிறமும் ஒன்றாக இருப்பதால், தாங்கள் சீட் பெல்ட் அணிந்திருந்தாலும் கூட அபராதத்துக்கான செல்லான் வந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
எனவே, கார் தயாரிப்பு நிறுவனங்கள், வித்தியாசமான நிறங்களில் சீல் பெல்ட்களை தயாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் யோசனை தெரிவித்திருந்தனர். அதுவரை கார் ஓட்டிகள்தான் கவனமாக இருக்க வேண்டும்.