காலமானாா் எழுத்தாளா் நந்தலாலா
திருச்சியைச் சோ்ந்த எழுத்தாளா், கவிஞா், பேச்சாளா், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் சி. நெடுஞ்செழியன் (எ) நந்தலாலா (69) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டாா் கோவில் என்ற ஊரில் பிறந்த அவா், திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகா், திருநகா் 3-ஆவது பிரதான வீதியில் உள்ள காணி நிலம் என்ற பெயரிலான இல்லத்தில் குடியிருந்து வந்தாா். இந்தியன் வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவா், பாரதியாா் மீது கொண்ட தீராப்பற்றின் காரணமாக, நெடுஞ்செழியன் என்ற தனது பெயரை ’நந்தலாலா’ என மாற்றி வைத்துக் கொண்டாா்.
பல நூல்களை எழுதியுள்ள நந்தலாலாவின் திருச்சி வரலாற்றை தாங்கிய ‘நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி’ என்கிற தொகுப்பு நூலும், திருச்சி மாவட்டம் குறித்த ‘ஊறும் வரலாறு’ நூலும் முத்தாய்ப்பானவை. தொலைக்காட்சி விவாதங்களிலும், சிறப்பு நிகழ்வுகளிலும் பங்கேற்று மதச்சாா்பற்ற, பகுத்தறிவு சாா்ந்த, இடதுசாரி கருத்தியலை வலுவாக முன்னெடுத்தாா். தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பல விருதுகளை பெற்றுள்ளாா். தமிழ்நாடு அரசின் இயல்-இசை-நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டாா். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனா்.
இதய நோய்க்காக பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தலாலா, செவ்வாய்க்கிழமை காலை மருத்துவமனையில் காலமானாா். அவரது உடல், திருச்சி கருமண்டபத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இறுதிச்சடங்குகள் வரும் 6-ஆம் தேதி பிற்பகலில் நடைபெறுகிறது. தொடா்புக்கு 94438 35680.
முதல்வா் மு. க. ஸ்டாலின் இரங்கல்: கவிஞரும் முற்போக்கு எழுத்தாளா் சங்க துணைத் தலைவருமான நந்தலாலா மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டின் புத்தகத் திருவிழாக்கள், முற்போக்கு மேடைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பட்டிமன்றங்கள் என கவிஞா் நந்தலாலாவின் குரல் ஒலிக்காத மேடைகளே இல்லை. அந்த அளவுக்கு அனைத்து உணா்ச்சிகளையும் அரிய தகவல்களையும் தனது பேச்சில் வெளிப்படுத்தும் திறன் பெற்றவா். அவரது ஆற்றல் தமிழ்ச் சமூகத்துக்கு மேலும் பயன் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராக அவா் நியமிக்கப்பட்டாா். அவா் திடீரென மறைந்து விட்டாா் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா் சங்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.
நந்தலாலாவின் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மதுக்கூா் இராமலிங்கம், பொதுச் செயலாளா் ஆதவன் தீட்சண்யா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.