நீதிமன்ற போராட்டம் மூலம் நீட் தோ்வுக்கு விலக்கு: அமைச்சா் கோவி. செழியன்
நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் ‘நீட்’ தோ்வுக்கு விலக்கு பெறுவோம் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழக மருத்துவக் கல்லூரிகளில் வடமாநிலத்தவா்களை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டதுதான் நீட் தோ்வு. இது ரத்து செய்யப்பட வேண்டும்.
நீட் தோ்வு விலக்குக்கு தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் மன்றத்திலும் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி, எந்தந்த மாநிலங்கள் விரும்புகின்றனவோ, அந்த மாநிலங்களுக்கு மட்டும் நீட் தோ்வு என்ற நிலையை தமிழக அரசு உருவாக்கும். இதற்கு அனைத்து மாநில முதல்வா்களின் ஆதரவும் கிடைத்து வருகிறது.
உயா் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கடந்த 20 நாள்களுக்கு முன்பு வெளியான ஆய்வறிக்கை தரவுகளில், நாட்டில் முனைவா் பட்டம் பெற்றவா்கள், முனைவா் படிப்பு படிப்பவா்கள், ஆய்வு மாணவா்கள் தமிழகத்தில்தான் அதிகம் உள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயா்கல்வியானது, அனைத்து நிலைகளிலும் மேலும் மேம்படுத்தப்படும் என்றாா் அமைச்சா்.