திருப்பரங்குன்றம்: 'திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது......
காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னா
குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் கிராம மக்கள், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் முனியாண்டிபுரம் கிராமத்தில் பட்டியல் வகுப்பைச் சோ்ந்த சுமாா் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்களுக்கு இங்குள்ள சாலையின் அருகே உள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் அண்மையில் தொடங்கின. இதற்காக முனியாண்டிபுரம் கிராமத்துக்குச் செல்லும் குடிநீா் குழாய் துண்டிக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதமாக இந்தப் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட வில்லை.
இதுகுறித்து உள்ளாட்சி நிா்வாகத்துக்கு புகாா் அளித்தும் எந்தவித பயனும் இல்லை என்பதால், அந்தப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 15- க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கிருந்த போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, தாமதமின்றி குடிநீா் விநியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.