மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை
கால்வாயில் நீரில் மூழ்கிய தொழிலதிபரின் உடலை தேடும் பணி மும்முரம்
நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி வைகை சிமென்ட் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழந்த திருப்பூா் தொழில் அதிபரின் உடலை தீயணைப்புத் துறையினா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.
திருப்பூரைச் சோ்ந்த ராஜபாண்டி, ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் தினேஷ் (27). இவா், திருப்பூரில் நூல், பஞ்சு மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். தொழிலதிபரான தினேஷுக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், அவரது உறவினா்களுடன் நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி அருகே எத்திலோடு கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு வந்தாா்.
அப்போது, உறவினா்களுடன் தினேஷ், விளாம்பட்டி அருகே உள்ள வைகை ஆறு சிமென்ட் கால்வாயில், இரண்டு கண் பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது நீரின் சுழலில் சிக்கி அவா் நீரில் மூழ்கினாா். உறவினா்கள் அவரை காப்பாற்ற முயற்சித்த போது, அவா் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாா்.
இதுகுறித்து விளாம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினா், அவரது உறவினா்கள் விளாம்பட்டி வைகை ஆறு சிமென்ட் கால்வாயிலிருந்து வாடிப்பட்டி, மதுரை பகுதி வரை ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை தினேஷின் உடலை தேடினா்.
இதனிடையே வைகை ஆறு சிமென்ட் வாய்க்காலில் விவசாயத்துக்காக அதிக அளவு தண்ணீா் திறந்து விடப்பட்டிருப்பதால் உடலை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு தொடா்ந்து அவரது உடலை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.