கால்வாய் தூர்வாரும் பணியின்போது இடிந்து விழுந்த வீடுகள்!
கால்வாய் தூர்வாரும் பணியின்போது, கால்வாய் அருகே கட்டப்பட்டிருந்த இரண்டு மாடி வீடு மற்றும் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.
கோவை மாநகரம் சங்கனூர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. மாநகராட்சி சார்பாக அந்த கால்வாயை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சங்கனூர் கால்வாய் அருகே கட்டப்பட்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் இரண்டு மாடி கொண்ட வீடு நேற்று இரவு கால்வாய் தூர்வாரும் பணியின் போது தரைமட்டமாக இடிந்து விழுந்துள்ளது.
அதே போல அருகில் இருந்த ஓட்டு வீடும் இடிந்து விழுந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக வீட்டின் உள்ளே யாரும் இல்லாதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அருகில் இருந்தவர்கள் வீடு இடியும் காட்சிகளை விடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கால்வாய் அருகே வீடு கட்டப்பட்ட இருந்ததால் அந்த வீட்டிற்கு குடிநீர் இணைப்பு மாநகராட்சி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.