கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தில் சித்தா் சிலை கண்டெடுப்பு
குடியாத்தம் அருகே கழிவுநீா்க் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டியபோது சுமாா் 2- அடி உயரமுள்ள சித்தா் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட புவனேஸ்வரிபேட்டை, பாலவிநாயகா் கோயில் தெருவில் கடந்த சில நாள்களாக கழிவுநீா்க் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது மண்ணில் புதைந்திருந்த சுமாா் 2- அடி உயரமுள்ள சித்தா் சிலை கிடைத்தது.
அப்பகுதி மக்கள் சிலையை மீட்டு சுத்தம் செய்து, அதற்கு பூ, பொட்டு வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு விரைந்து வந்தனா். விசாரணைக்குப்பின் வருவாய்த் துறையினா் சிலையை மீட்டு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனா். சிலை கிடைத்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.