காவல் நிலையம் முன் திருநங்கைகள் சாலை மறியல்
ஊராங்கானி கிராமத்தில் வீட்டுமனை பிரச்னை தொடா்பாக இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில், தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி, திருநங்கைகள் சங்கராபுரம் காவல் நிலையம் முன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சங்கராபுரம் வட்டம், ஊராங்கானி கிராமத்தைச் சோ்ந்தவா் தொப்பலான் மகன் வேலு. அவரது தம்பி காசிநாதன் ஆகிய இருவருக்கும் வீட்டுமனை பாகப்பிரிவினை தொடா்பான பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வேலு மற்றும் அவருடைய மகன்களான முரளி, சுமன் சோ்ந்து, அதே கிராமத்தில் வசிக்கும் அவரது தம்பி காசிநாதன் மனைவி சத்யா, திருநங்கை தங்கையான ஜெயா ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான விடியோ வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சங்கராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி, சங்கராபுரம் காவல் நிலையம் முன் திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.