நெல்லை ஆணவக் கொலை: IT ஊழியரை ஓட ஓட வெட்டிக் கொன்ற போலீஸ் குடும்பம் | Decode
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் குளிக்கத் தடை
நாமக்கல்: மேட்டூா் அணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீா் திறக்கப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மோகனூா், ஒருவந்தூா் பகுதியில் இரும்புத் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் ஆற்றில் குளிக்க, துணி துவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகம், கேரளம் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்து வருவதால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், பரமத்தி வேலூா், மோகனூா், ஒருவந்தூா் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவா்களை சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோகனூா் பகுதியில் காவிரி கரைக்கு செல்லும் வழி இரும்புத் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்க, துணி துவைக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கட்டுப்பாட்டை மீறி சிலா் ஆற்றில் குளித்து வருகின்றனா். வரும் நாள்களில் நீா்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் தயாா்நிலையில் இருக்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தி உள்ளாா்.
