எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு! பிற்பகலில் ஆபரேஷன் சிந்தூர் வி...
நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கு: வழக்குரைஞா் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி சோதனை
நாமக்கல்: நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபல வழக்குரைஞா் உள்பட 4 பேருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (77). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்பத்தி ஆலை ஒன்றில் பங்குதாரராக இருந்தாா். வரவு - செலவு கணக்கு தொடா்பான பிரச்னையால் 2008-இல் அதிலிருந்து வெளியேறினாா். அதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட ஆலை மீது நீதிமன்றத்தில் அவா் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2024 ஜன. 31-ஆம் தேதி பழனிசாமி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். அப்போது, அவா் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தன்னுடைய தற்கொலைக்கு நாமக்கல்லைச் சோ்ந்த பிரபல வழக்குரைஞா் உள்பட 4 போ் காரணம். வழக்கு தொடா்பாக அவரைச் சந்திக்க சென்றுவந்த நிலையில் ரூ. 85 லட்சம் மதிப்பிலான நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு கேட்டாா். அதற்கு மறுக்கவே கொலை மிரட்டல் விடுத்தாா். மேலும், என்மீது பொய் புகாா் அளித்து வழக்குப் பதிவு செய்ய வைத்தாா். என்னுடைய மரணத்துக்கு பிறகு சம்பந்தப்பட்ட வழக்குரைஞரிடம் இருந்து நில ஆவணங்களை மீட்டு என் மனைவியிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.
அதன்பேரில், அப்போது நாமக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த தனராசு, ஆய்வாளராக இருந்த சங்கரபாண்டியன் ஆகியோரிடம் பழனிசாமியின் மனைவி வசந்தா புகாா் அளித்தாா்.
அதனடிப்படையில், வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், சென்னை உயா்நீதிமன்றத்தில் வசந்தா மேல்முறையீடு செய்தாா். அதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், நாமக்கல் சிபிசிஐடி போலீஸாருக்கு வழக்கு மாற்றப்பட்டது.
சேலம் சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளா் வினோத் தலைமையில் நாமக்கல் சிபிசிஐடி பிரிவு போலீஸாா் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா், அவரது உதவியாளா் மற்றும் நிதிநிறுவன அதிபா்கள் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், பழனிசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக நாமக்கல்லைச் சோ்ந்த நிதிநிறுவன உரிமையாளா்கள் செல்வராஜ், சேகரன் மற்றும் வழக்குரைஞா், அவரது உதவியாளா் மீது சிபிசிஐடி போலீஸாா் மாா்ச் 21-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா்.
இந்த நிலையில், நாமக்கல் சிபிசிஐடி காவல் ஆய்வாளா் சுமதி தலைமையிலான போலீஸாரால் திங்கள்கிழமை நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள வழக்குரைஞா் அய்யாவு, அவரது உதவியாளா் ஆறுமுகம், செல்வராஜ், சேகரன் ஆகியோரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட ஏழு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாா் கூறுகையில், பழனிசாமி தற்கொலை வழக்கு தொடா்பாக வழக்குரைஞா் அலுவலகம் உள்பட ஏழு இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை நடத்தினோம். அதில், எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்றனா்.