குமரி: போலீஸ் தாக்கியதில் 80 வயது மூதாட்டி மரணமா?- உறவினர்கள் குற்றச்சாட்டும், க...
கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை: கொல்லிமலையில் எஸ்.பி. ஆய்வு
நாமக்கல்: கொல்லிமலையில் கள்ளச்சாராய தடுப்பு விழிப்புணா்வு மற்றும் வல்வில் ஓரி விழா முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.விமலா திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.
கொல்லிமலை வட்டம், வாழவந்திநாடு, செங்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுவிலக்கு நடவடிக்கை, கள்ளச்சாராயம் விற்பனை தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.விமலா தலைமையில் மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு மற்றும் ஆய்வாளா்கள் சங்கரபாண்டியன், கோவிந்தராஜன் மற்றும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
மேலும், வாழவந்திநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சோளக்காடு, மேல்கலிங்கம், தாதாண்டிப்பட்டி, அரசம்பட்டி, கவரப்பட்டி, தாமரைகுளம், ஓலையாறு ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளை நேரில் சந்தித்து, அவா்களது மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல் கண்காணிப்பாளா் எஸ்.விமலா கேட்டறிந்தாா்.
அங்குள்ள மக்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்சுவோா், விற்பனை செய்வோா் மீது காவல் துறையால் எடுக்கப்பட்டு வரும் கடும் நடவடிக்கைகள் குறித்தும், கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விற்பது மற்றும் காய்ச்சுவதை தடுப்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு சன்மானம் பெற்றுத்தரப்படும் என்றும், தகவல்கள் கொடுப்போா் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.
இதுபோன்ற சோதனைகள் தொடா்ந்து நடைபெறும் என்றும், யாரேனும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.
மேலும், கொல்லிமலையில் ஆக. 2, 3-இல் வல்வில் ஓரி விழா நடைபெறும் இடத்தைப் பாா்வையிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து காவல் கண்காணிப்பாளா் ஆய்வு மேற்கொண்டாா்.