ஆடிப்பூர விழா: அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம்
நாமக்கல்: ஆடிப்பூர விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் செல்வ விநாயகா் கோயிலில் அமைந்துள்ள துா்க்கை அம்மனுக்கு ஆயிரக்கணக்கான வளையல்களை கொண்டு அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக, நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல, நாமகிரிதாயாா், சின்னமுதலைப்பட்டி அம்மச்சி அம்மன், நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன், செடல் மாரியம்மன், ராசிபுரம், நாமக்கல் என்ஜிஜிஓ காலனி நித்திய சுமங்கலி மாரியம்மன், முத்துக்காப்பட்டி மகா மாரியம்மன், பழையபாளையம் அங்காளம்மன், கொண்டமநாயக்கன்பட்டி ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில்களிலும் வளையல்கள் சாத்துப்படி செய்யப்பட்டு அம்மனுக்கு அலங்காரம் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சாத்துப்படி செய்யப்பட்ட வளையல்களை பிரசாதமாக பெற்று சென்றனா்.
நாமக்கல் வாராஹி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், பன்னீா், திருநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருள்களால் அபிஷேகங்கள் செய்து பின்னா் பக்தா்களால் வழங்கப்பட்ட இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வளையல்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து வளையல்களை பிரசாதமாக பெற்றுச்சென்றனா். தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பரமத்தி வேலூரில்...
பரமத்தி வேலூரில் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன், வேலூா் எல்லையம்மன், வேலூா் மகா மாரியம்மன், பேட்டை புது மாரியம்மன், பகவதியம்மன், பொத்தனூரில் உள்ள பகவதியம்மன், மகா மாரியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பரமத்தி அங்காளபரமேஸ்வரி, கோப்பனம்பாளையம் அங்காள பரமேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உள்ள அம்மனுக்கு தேன், பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், திருமஞ்சனம், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், வளையல் அலங்காரமும் நடைபெற்றன. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.


