திருவாரூர்: பேச மறுத்த காதலி வீட்டில் நண்பர்களுடன் ரகளை செய்த காதலன்- சண்டையை வி...
தாராபுரம் வழக்கறிஞர் கொலை: கூலிப்படை வைத்துக் கொன்ற பள்ளித் தாளாளர்; 6 பேர் சரண்; நடந்தது என்ன?
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம். இவரது சித்தப்பா தண்டபாணி (60). இவருக்கும் முருகானந்தத்தின் தந்தையான முன்னாள் ராணுவ வீரர் லிங்குசாமிக்கும் சொத்து தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், காங்கேயம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த லிங்குசாமி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் போதிய சாட்சிகள் இல்லாததால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகத் தெரியவருகிறது.
இந்நிலையில், தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வரும் தண்டபாணிக்குச் சொந்தமான தனியார்ப் பள்ளிக் கட்டடம் பள்ளிக் கல்வித் துறை அனுமதித்த அளவைவிட 4 மாடிகளில் கட்டப்பட்டுச் செயல்படுவதாகவும், இதனால் அங்குப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும் எனவும் கூறி, முருகானந்தம் தனது சித்தப்பா மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

அந்த வழக்கில் தண்டபாணி அனுமதியின்றி கட்டியிருந்த கூடுதல் 4 மாடிக் கட்டடம் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த மாதம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பள்ளி செயல்பட்டு வரும் கட்டடம் முழுவதுமே முறைகேடாகக் கட்டப்பட்டது என்றும் கட்டடத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாக உள்ளது; எனவே இதைப் பரிசீலனை செய்து அப்பள்ளி கட்டடத்தை முழுவதுமாக அகற்ற வேண்டும் என்றும் கோரி, முருகானந்தம் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணையை மீண்டும் நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து தண்டபாணிக்கு நோட்டீஸ் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளியின் உறுதித்தன்மையைப் பார்வையிட நீதிமன்ற ஊழியர்களுடன் வழக்கறிஞர் முருகானந்தம் இன்று காலை பள்ளிக்கு வந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த 5 பேர் வழக்கறிஞர் முருகானந்தத்தை அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். இதனைப் பார்த்ததும் அலறி அடித்து ஓடிய உடன் வந்த நீதிமன்ற ஊழியர்கள் தாராபுரம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் முருகானந்தத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "வழக்கறிஞர் முருகானந்தம் நீதிமன்றம் மூலம் தனக்குத் தொல்லை கொடுத்து வந்ததால் தண்டபாணி கூலிப் படை வைத்து அவரைக் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளியின் தாளாளர் தண்டபாணி, கூலிப்படையினரான திருச்சி முசிறி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் தட்சிணாமூர்த்தி, சேலம் பேலுர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் ராம், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சிவசாமி மகன் சுந்தரன், திருச்சி பகுதியைச் சேர்ந்த செட்டிபாபு மகன் நாகராஜன் உள்பட 6 பேர் நபர்கள் தாராபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர் . சரணடைந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று கூறினர்.
தாராபுரத்தில் வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.