நெல்லை: அரிவாளுடன் ஊரை பதற வைத்த சிறுவர்கள்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு! நடந்தது என்ன?
நெல்லை மாவட்டம் பாப்பாகுடி அருகே உள்ள இடைக்கால் பகுதியைச் சேர்ந்த இரு இளஞ்சிறார், நேற்று இரவு ஊருக்கு ஒதுக்கு புறமான குளக்கரை பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சக்திவேல் அப்பகுதியில் கடை வைத்துள்ளார். அவருடன் இளஞ்சிரார் இருவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்துள்ளது.
இந்த நிலையில் சக்திவேல் வந்ததும் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். தாங்கள் குடித்துவிட்டு ஊருக்குள் வந்து தகராறு செய்வதை போலிஸாரிடம் தகவல் சொல்வதாக வம்பிழுத்து அவரை அடித்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க சக்திவேல் ஊருக்குள் ஓடியுள்ளார். ஆனால் அவர்கள் அரிவாள் எடுத்து அவரை வெட்டிள்ளனர். அதில் அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
கிராமப் பகுதியில் நடக்கும் தகராறு குறித்து ரோந்துப் பணியில் இருந்த காவலர்கள் அறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். அங்கே அரிவாளுடன் நின்று கொண்டிருந்த இரு இளஞ்சிறார்களைப் பார்த்த காவலர்கள், அவர்களை அங்கிருந்து வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மது போதையில் இருந்த இரு சிறுவர்களும் போலீஸாரையும் அரிவாளால் தாக்க முயற்சித்தனர். அப்போது ரஞ்சித் என்ற சிறப்பு காவல் படை காவலருக்கு காலில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. உடனடியாக இருவரும் அருகில் இருந்த வீட்டுக்குள் ஓடித் தப்பினார்கள்.

இடைக்கால் பகுதியில் நடந்த சம்பவம் குறித்து பாப்பாக்குடி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்த போலீஸார், கூடுதலாக காவலர்களுடன் வந்து தங்களைக் காப்பாற்றுமாறு உதவி கேட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் கூடுதல் காவலர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அவர்களைக் கண்டும் அச்சப்படாத சிறுவர்கள் அரிவாளுடன் அவர்களையும் விரட்டியுள்ளனர்.
உதவி ஆய்வாளர் முருகனை ஒரு சிறுவன் வெட்டப் பாய்ந்துள்ளார். அவர் அருகில் உள்ள வீட்டின் பாத் ரூமுக்குள் சென்று பதுங்கினார். அந்த வீட்டுக்குள் வந்த ஒரு சிறுவன் அங்கிருந்த ஒரு பெண்மணி அவரது மகன் ஆகியோரை வெட்ட பாய்ந்ததோடு உதவி ஆய்வாளர் முருகன் பதுங்கி இருந்த அறையின் கதவை அரிவாளால் வெட்டி அவரையும் கொலை செய்ய முயன்றுள்ளார்.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட உதவி ஆய்வாளர் முருகன், தற்காப்புக்காக அந்த சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அந்த சிறுவனது உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவர் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டர் போலீஸார் அந்த சிறுவனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது வயிற்றில் பாய்ந்த துப்பாக்கி குண்டை அகற்ற மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். அந்த சிறுவனது உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கிராம மக்களிடம் தகராறு செய்த மற்றொரு சிறுவனையும் போலீஸார் கைது செய்தனர். கைதான இரு சிறுவர்கள் மீதும் ஏற்கெனவே முக்கூடல் மற்றும் பாப்பாக்குடி காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் மீது எட்டு வழக்குகளும் மற்றொரு சிறுவன் மீது நான்கு வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே காயமடைந்த கடைக்காரர் சக்திவேல் மற்றும் காவல் துறையினரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தாவிட்டால் தன்னையும் தனது மகனையும் வீட்டுக்குள் நுழைந்து வெட்டி கொலை செய்திருப்பார்கள் என பாதிக்கப்பட்ட பெண் அச்சத்துடன் தெரிவித்தார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கேட்டறிந்தார்.
சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு உதவியாக இருக்கும் அவரின் தந்தை துரை என்பவர் கூறுகையில், "நான் கூலி வேலை செய்து வருகிறேன். என் மகனும் கூலி வேலைக்குச் செல்கிறான். என் மகன் மோசமான நண்பர்களுடன் சேர்ந்து குடித்து விட்டு தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்தான். அவனை நான் பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை. அவன் மீது ஏற்கெனவே பல வழக்குகள் இருக்கின்றன. என் சொல் பேச்சைக் கேட்காததால் இப்போது துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவுக்கு சென்று விட்டது" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.