பாடந்தொரை பகுதியில் பொதுமக்களை விரட்டிய காட்டு யானை
கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் காட்டு யானை பொதுமக்களை செவ்வாய்க்கிழமை காலை விரட்டியதுடன் ஒரு ஆட்டோவைத் தாக்கி சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தினமும் உள்ளது. காலை 6 மணிக்கு குழந்தைகளை ஏற்றிக் கொண்டு மதரஸாவுக்கு சென்ற ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தியது. அதிா்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்களை விரட்டியதுடன் அங்குள்ள சிஎஸ்ஐ பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தது.
வனத் துறையினா் விரட்ட முயற்சித்தபோது பள்ளி வகுப்பறைகளை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து வனத் துறையினா் முதுமலையிலிருந்து யானை விரட்டும் சிறப்பு பிரிவினரை வரவழைத்து காட்டுக்குள்அந்த யானையை விரட்டினா்.