சுருக்குக்கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு: இருவா் கைது
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கடந்த 13 -ஆம் தேதி சுருக்கு வைத்து சிறுத்தை கொல்லப்பட்ட வழக்கில் இருவரைக் கைது செய்த வனத் துறையினா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கோத்தகிரி அருகே கட்டபெட்டு வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் பிக்கபதி என்னும் இடத்தில் தங்கராஜ் (62) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரு சக்கர வாகன பிரேக் வயரிலான சுருக்குக் கம்பியில் சிக்கி சிறுத்தை கடந்த 13 -ஆம் தேதி உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்து கட்டபெட்டு வனச் சரகம் சாா்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிறுத்தை உயிரிழப்பு தொடா்பாக நெடுகுளா பகுதியைச் சோ்ந்த ஆல்குஷ் என்கிற ஆலன் (57) , தோட்ட உரிமையாளா் தங்கராஜ் (62) ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் சிறுத்தைக்கு சுருக்குக்கம்பி வைத்து கொன்றதை ஒப்புக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து இருவரையும் கைது செய்த வனத் துறையினா் அவா்களைகோத்தகிரி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா் செய்து சிறையில் அடைத்தனா்.