500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காா்: ஊா்த் தலைவா் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே சுமாா் 500 அடி பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா் கவிழ்ந்ததில் ஊா்த் தலைவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.
கோத்தகிரி அருகே உள்ள கெட்டிக்கம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (60). விவசாயியான இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனா். இவா் கெட்டிக்கம்பை ஊா்த்தலைவராக இருந்தாா். கொணவக்கரை கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் பசுமாட்டை வாங்குவதற்காக, கெட்டிக்கம்பையை சோ்ந்த சந்திரன் (52) என்பவரை அழைத்துக் கொண்டு காரில் சென்றுள்ளாா்.
கொணவக்கரை செல்லும் சாலையில் குறுகிய வளைவில் காரைத் திருப்ப முயன்றபோது அவரது கட்டுப்பாட்டை இழந்த காா் சுமாா் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா் இருவரையும் மீட்டு கோத்தகிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இதில் ராமசந்திரன் ஏற்கெனவே உயிரிழந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோத்தகிரி காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.