பாகிஸ்தானுடன் உறவு வேண்டாம்; கிரிக்கெட் மட்டும் வேண்டுமா? -மத்திய அரசுக்கு ஓவைசி...
பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக ஜம்மு - காஷ்மீர் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியது.
இதில், ஜம்மு - காஷ்மீர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பெற்றோர் இருவரையும் இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளதாக ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தெரிவித்துள்ளார்.
அந்த குழந்தைகளின் படிப்புக்கான முதல்கட்ட நிதியுதவி ஆகஸ்ட் 30 ஆம் தேதி (நாளை) வழங்கவுள்ளதாகவும், அவர்கள் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யும்வரை கல்விக்கான நிதியுதவியை ராகுல் காந்தி வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது தாக்குதலில் பெற்றோர்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பட்டியலைத் தயார் செய்ய உள்ளூர் கட்சித் தலைவர்களிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.
அதனடிப்படையில், பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசின் தரவுகளுடன் சரிபார்க்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.