"என் தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்... அந்த வலி எனக்கு புரியும்" - மக்களவையில் பிரியங்கா
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நேற்றில் இருந்து பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து இன்று மக்களவையில் பிரியாங்கா காந்தி பேசியதாவது...
"நேற்று, பாதுகாப்புத் துறை அமைச்சர் தீவிரவாதம், நாட்டை பாதுகாப்பது, வரலாறு படத்தை எடுப்பது என ஒரு மணி நேரம் பேசினார்.
ஆனால், அவர் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பேசவில்லை. அது, 'எப்படி இந்தச் சம்பவம் நடந்தது' என்பது ஆகும்.
பைசரான் பள்ளத்தாக்கில் ஏன் ஒரு பாதுகாப்பு அதிகாரி கூட இருக்கவில்லை?
குடிமக்களின் பாதுகாப்பு பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பொறுப்பு இல்லையா?

நேரு, இந்திரா காந்தி, என் அம்மா...
இன்று உள்துறை அமைச்சர் நேரு குறித்தும், இந்திரா காந்தி குறித்தும் பேசினார். அவர் என் தாயின் கண்ணீர் குறித்துக்கூட பேசினார்.
ஆனால், அவர் ஏன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்பது குறித்து மட்டும் பதிலளிக்கவில்லை.
என் தாயின் கண்ணீர் குறித்து பேசியதற்கு, நான் பதில் அளிக்க வேண்டும். என்னுடைய தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டப் போது, என்னுடைய அம்மா கண்ணீர் சிந்தினார். நான் இன்று 26 பேர் குறித்து பேசுகிறேன் என்றால், நான் அவர்களது வலியை உணர்கிறேன் என்பதால் தான்.
ஆனால், அவர் ஏன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்பது குறித்து மட்டும் பதிலளிக்கவில்லை.

அன்று ஏன் பாதுகாப்பு இல்லை?
இந்த அரசு எப்போதும் கேள்விகளில் இருந்து தப்பிக்க முயல்கிறது. அவர்கள் குடிமக்களிடம் எந்தப் பொறுப்புணர்ச்சியும் கிடையாது.
உண்மை என்னவென்றால், அவர்கள் மனதில் மக்களுக்கு இடம் இல்லை.
அவர்களுக்கு எல்லாமே அரசியலும், பப்ளிசிட்டியும் தான்.
இன்று இங்கே அமர்ந்திருக்கும் அனைவருக்கும் பாதுகாப்பு உள்ளது. ஆனால், பஹல்காமில், அந்த நாளில் 26 பேர் அவர்களது குடும்பத்தின் கண்முன்னேயே கொல்லப்பட்டிருக்கின்றனர்.
அந்த நாளில் பைசரான் பள்ளத்தாக்கில் இருந்த எந்த மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
நீங்கள் எத்தனை ஆபரேஷன் நடத்தினாலும், உண்மைக்கு பின்னால் நீங்கள் ஒளிய முடியாது".