சினிமாவிலிருந்து மம்மூட்டி ஓய்வு?
நடிகர் மம்மூட்டி உடல்நிலை காரணங்களால் சினிமாவிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்மூட்டி 73 வயதிலும் தோற்றத்தில் இளமையாகவே இருக்கிறார். இதனால், ரசிகர்கள் பலரும் 73 வயது இளைஞன் என்றே செல்லமாக அழைத்தும் வருகின்றனர்.
இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பசூகா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்தது.
தற்போது, களம் காவல் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அடுத்ததாக, மோகன்லாலுடன் பேட்ரியாட் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
வழக்கமாக, ஒன்றிரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் மம்மூட்டி, இன்னும் தன் அடுத்த படத்தை ஒப்பந்தம் செய்யாமல் இருக்கிறாராம். காரணம், சில மாதங்களுக்கு முன் மம்மூட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் பரவின.
ஆனால், சாதாரண உடல்நிலை பிரச்னைதான் என மம்மூட்டி தரப்பிலிருந்து விளக்கம் வந்தது. இருந்தும், நடிகர் மோகன்லால் சபரி மலைக்குச் சென்று மம்மூட்டிக்கு அர்ச்சனை செய்தது சந்தேகத்தை வலுத்தது.
இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி சினிமாவிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நிலை பிரச்னைகள் சரியானதும் அவர் மீண்டும் நடிப்பிற்குத் திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: அரங்கம் அதிருமா? கூலி டிரைலருக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!