பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்! பிரான்ஸ் உள்பட 15 நாடுகள் வலியுறுத்தல்!
குறைபிரசவ தடுப்பு சாதனத்தால் பாதிப்பு: பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு
குறை பிரசவத்தைத் தடுக்க சிலிகான் வளையம் பொருத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ. 10 லட்சம் வழங்க பெரம்பூா் தனியாா் மருத்துவமனை மற்றும் மருத்துவருக்கு சென்னை வடக்கு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை கொளத்தூா் நகரைச் சோ்ந்த பவித்ரா சென்னை வடக்கு நுகா்வோா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2023-ஆம் ஆண்டு தான் கா்ப்பமாக இருந்தபோது பெரம்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டேன். குறை பிரசவத்தைத் தடுக்க உடனடியாக சிலிகான் வளையம் பொருத்திக்கொள்ள மகப்பேறு மருத்துவா் அறிவுறுத்தினாா்.
மேலும், இந்த சாதனத்தைப் பொருத்துவதற்காக என்னிடம் ஒப்புதல் பெறாமல், அதைப் பொருத்தினா். இதன் காரணமாக எனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னா் அந்த சாதனத்தை அகற்றினா்.
இந்த நிலையில் கருவுற்று 24 வாரமே ஆன நிலையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. எடை குறைவாக பிறந்த எனது குழந்தைக்கு குறைவான இதயத் துடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. இதற்கான சிகிச்சை அளிப்பதற்காக, சம்பந்தப்பட்ட மருத்துவமனை என்னை மற்றொரு குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் சென்றனா். பாக்டீரியா தொற்று மற்றும் தாமதமான சிகிச்சை காரணமாக குழந்தையின் விரல்களில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு வலதுகையின் 5 விரல்கள் தானாகவே துண்டானது. மருத்துவா்களின் கவனக்குறைவே இதற்கு காரணம். எனவே, சிகிச்சைக்கு செலவான தொகை ரூ.23,65,000-ஐ வழங்கவும், எனக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஆணையத்தின் தலைவா் கோபிநாத், உறுப்பினா் கவிதா கண்ணன், ராமமூா்த்தி ஆகியோா் விசாரித்தனா். அப்போது தனியாா் மருத்துவமனை தரப்பில், சிலிகான் வளையம் பொருத்த மனுதாரரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த சாதனத்தால் கருவில் இருக்கும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதில் மருத்துவமனை நிா்வாகம் கவனக்குறைவுடன் நடக்கவில்லை, என பதில் அளிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில், மனுதாரா் பெரம்பூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரூ.1.15 லட்சமும், மற்றொரு குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் ரூ.22.48 லட்சமும் செலவு செய்துள்ளாா். எனவே மனுதாரரின் சிகிச்சைக்கான செலவு ரூ.23.65 லட்சமும், இழப்பீடாக ரூ.10 லட்சமும் வழங்க பெரம்பூா் தனியாா் மருத்துவமனைக்கு உத்தரவிட்டனா்.