ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை: கடம்பூர் ராஜு பேச்சு
1999ல் மத்தியில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து வரலாற்று பிழை செய்துவிட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக - பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு,
"திமுக இன்று வளர்ச்சியுடன் இருப்பதற்குக் காரணமே பாஜகதான். 1999ல் சுப்பிரமணிய சுவாமியின் தவறான வழிகாட்டுதலால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்றுப் பிழையை செய்துவிட்டோம். இதன் விளைவு என்னவென்றால் திமுக கூட்டணி 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. இன்று திமுக இவ்வளவு வசதி வாய்ப்புடன் செழிப்பாக அதிகாரத்துடன் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பாஜகதான். ஆனால் திமுக அந்த நன்றி இல்லாமல் அதனை தீண்டத்தகாத கட்சியாகப் பார்க்கிறது" என்று பேசியுள்ளார்.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கடம்பூர் ராஜு இவ்வாறு கூறியுள்ளது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.