செய்திகள் :

``அப்பனுக்கு பனை ஓலையில பைத்தியம்ன்னு என் மகன் சொல்லிட்டு திரியிவான்'' - ஓலை கலைஞர் பால்பாண்டி

post image

பனை ஓலையில் எழுதலாம்.... பனை ஓலையாலேயே எழுதலாமா? - ரெக்கார்ட் அடித்த தூத்துக்குடி பனை ஓலை கலைஞர்.

குறுக்குப்பிடி குணப்படுத்துவது, சுளுக்கு தடவுவது, விஷக்கடிக்கு வைத்தியம் பார்ப்பது போன்றவற்றில் கிடைக்கும் பணத்தை வைத்து பனை ஓலையை சொந்தமாக வாங்கி அந்த பனை ஓலையில் சிங்கம், மயில், கழுகு, மாட்டு வண்டி, செருப்பு, மாஸ்க், தொப்பி, தண்ணீர் பாட்டில் உரை போன்றவற்றை செய்து அசத்தியிருக்கிறார், 66 வயதான, தூத்துக்குடி கருங்குளத்தைச் சேர்ந்த பால்பாண்டி.

அதுமட்டுமல்லாமல் கருணாநிதி, ஜெயலலிதா, அப்துல் கலாம், காமராஜர் போன்றவர்களை ஐந்தாறு மாதங்கள் பனை ஓலையையே தீனி போட்டு வளர்த்து இருக்கிறார்.

சமீபமாக ஏழு அரை அடி உள்ள மோடி உருவத்தையும், ஏன் அவர் போட்டிருக்கும் கண்ணாடி உள்பட முழுவதுமாக பனை ஓலையிலேயே கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.

எந்த பணமும் இதில் கிடைக்காவிட்டாலும் ஏன் இதை இவ்வளவு ஆர்வமாக செய்கிறீர்கள் என்று கேட்டபோது, "நான் ஒரு பனையேறி. என் பூர்வீக தொழிலே இதுதான். 2018-ல கீழ விழுந்து அடிப்பட்டு கெடந்தேன். அதுல இருந்து ஆரம்பிச்சது தான் இது. இதுதான், அது தான்னு இல்ல எந்த சீர்ல மனம் போகுதோ அந்த சீர்ல பனை ஓலைய முனஞ்சிருவன்.

இப்படி முதல்ல முனஞ்சது உலக அதிசயம் தாசுமஹாலு. தாசு மஹால பாத்ததும் " நீரு இப்படியாபட்ட மனுஷனா" ன்னு எல்லாரும் பாராட்டுனாவா. அப்படியே பேரிஸ் டவரு, திருப்பதி கோயிலுன்னு எல்லாம் பண்ணுனேன்.

வேத கோயிலு பண்ணுவியான்னு கேட்டாவா, வேத கோயில் என்ன வேளாங்கண்ணியே பண்ணுவேன். நமக்கு சாதி, மதம் பேதம்னு ஒன்னும் கெடையாதுன்னு சொன்னேன்.

ரெட்ட எல, உதய சூரியன்னு ரெண்டு கட்சி சின்னமும் செஞ்சிருக்கேன். எந்த கட்சி காரவா பாக்க வந்தாலும் டபக்குனு எடுத்துக் கொடுத்தர்லாம்லா. கடைசியா பண்ணுனது பிள்ளையார் செல. 4 மாசம் ஆச்சு இத ரெடி பண்ண. இது கும்பிடறதுக்கே ஊர் மக்கவருவாவ. வந்து பாத்துட்டு "சாமிய நீரு கோயிலுக்கு கொடுக்கலாம்ல"ன்னு கேப்பாவா" என்று குதூகலமாக கூறினார்.

ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் இவர் யாருமே செய்யாத விஷயத்தை செய்து அசத்தி இருப்பதால், Future book of records, Universal achievers book of records, Doctorate in book recording போன்ற பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது மட்டுமல்லாமல் "டாக்டர் பால்பாண்டி" என்பதை பனை ஓலையிலேயே முனைந்து எழுதி இருக்கிறார்.

சில சர்டிபிகேட்டை கூட பனை ஓலையிலேயே ஃப்ரேம் போட்டும் அசத்தியுள்ளார்.

இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது "அவார்ட் கொடுக்க எவுக கூப்டாலும் நான் என் கையால, பனை ஓலையில முனைஞ்ச செருப்பத்தான் போட்டுட்டு போவேன்.. நான் முனஞ்ச சூட் கேசத்தான் தூக்கிட்டு போவேன். பரியேறும் பெருமாள் படத்துக்கு என் பெட்டிக்கூடைய கேட்டாவா, கொடுத்துப்புட்டம்லா.

ஆனா என்ன ஒன்னு, இவ்வளத்தையும் செஞ்ச பெறவு இதப் பாதுகாக்கணும். அதுதான் பெரிய வேலையாச்சு. காத்தடிக்கும், தூசி பறக்கும், என் தாசு மஹாலு , பூனைக்கு அரங்கு வீடு மாதிரி; உள்ள வந்து கிழிச்சுகிட்டு உக்காரும். யாராச்சும் காசு தந்தா இதச் சுத்தி ஒரு கண்ணாடி பெட்டியாச்சும் போடுவேன். இப்ப கூட 30 ஓலை குத்தாக்கு, நல்ல குருத்து ஓலையா பாத்து 2000 ரூவாய்க்கு கெரையத்துக்கு வாங்கி இருக்கேன். உருவம் முனையும்போது, சமயத்துல, உடம்பு முனஞ்சுபுடுவேன். முகம் முனைய வராது. அப்டியே தூக்கி போட்டுருவேன். திடீர்னு யோசன வந்ததும் நடு சாமத்துல எந்திரிச்சு திருப்பியும் முனைவன்.. "அப்பனுக்கு பனை ஓலையில பைத்தியம் பிடிச்சுட்டு"ன்னு என் மகன் சொல்லிட்டு திரியிவான். காலத்து வரைக்கும் ஏதாவது ஒன்னு பண்ணிக்கிட்டே தான் இருப்பேன். இத விடுறதா சோலியே கெடையாது. நான் முனையனும், வரவ எல்லாம் பாத்து ரசிக்கணும்" என்று கம்பீரமாக அவருடைய அனுபவங்களையும் சாதனைகளையும் பகிர்ந்து கொண்டார்.

எழுதும் நிலா- மார்கரெட் அட்வுட்; கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 23

‘கண்ணில் ஒரு கொக்கியைப் போல்நீ என்னுள் பொருந்துகிறாய்ஒரு மீனின் கொக்கிஒரு திறந்த கண்’‘You fit into me’ என்ற கனடியக் கவிஞர் மார்கரெட் அட்வுட்டின் குறுங்கவிதை. கண்ணிலொரு தூசு விழுந்தாலே தாங்கமுடியாது; ஆ... மேலும் பார்க்க

Velpari: "எழுத்தாளர்கள் வேள்பாரி போன்ற படைப்புகளைக் கொடுக்க வேண்டும்" - முதலமைச்சர் வாழ்த்து

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) சு.வெங்கடேசன் எழுத்தில் விகடன் பிரசுரம் வெளியிட்ட வேள்பாரி நாவல் ஒரு லட்சம் பிரதிகள் தாண்டி விற்றதற்கான வெற்றிப் பெருவிழா கொண்டாடடப்பட்டது. சு.வெங்கடேசனின் சாதனைக்காக பல ... மேலும் பார்க்க

பல்லூழிக்காலப் பூங்காற்று - பர்மியக் கவிஞர் யூ பை | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 20

பர்மியக் கவிதைகள் தனது வரலாற்றில் பெரும்பாலான காலங்களில் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்புடன் நேரடித் தொடர்புடையவையாக இருந்தன. மேற்கத்திய நாடுகளில் நம்பமுடியாத அரசியல் சுழற்சி, பெ... மேலும் பார்க்க

Henry Kendall: மணிப்புறாக்களின் கீச்சொலிகள் - ஹென்றி கெண்டால் - கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 19

ஆஸ்திரேலியாவின் மத்திய கடற்கரை நெடுஞ்சாலையின் ஒதுக்குப் பகுதியில் 1920-ஆம் ஆண்டிற்கு முந்தைய காலத்தில் கட்டப்பட்ட ஒரு கல் நினைவுச் சின்னம் இருக்கின்றது. அதன்மீது ஒரு பளிங்குத் தகடு பொறிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க