Ind vs Eng: `க்ரீன் பிட்ச்; ஓவல் டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா?’ - கில் முடிவு தான் என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. முன்னதான செய்தியாளர் சந்திப்பில் பும்ரா பிளேயிங் 11ல் இருப்பாரா இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்தார் கேப்டன் சுப்மன் கில்.
பும்ரா அணியில் இருப்பாரா இல்லையா என்பதை கூற மறுத்த கில், அர்ஷ்தீப் சிங் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் பேசினார்.
பும்ரா இந்த டெஸ்ட் தொடரின் மிக முக்கியமான பந்துவீச்சாளராக இருந்துவருகிறார். பந்துவீசிய 5 இன்னிங்ஸ்களில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டு இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அவரது உடல்நிலை அணிக்கு முக்கிய கவலையாக இருந்துவருகிறது.
இந்த தொடரில் இதுவரை 119.4 ஓவர்கள் வீசியிருக்கிறார் பும்ரா. அவரது பவுலிங் ஆக்ஷன் காரணமாக அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதானல், பிசிசிஐ மருத்துவ குழு அறிவுறுத்தியதன்படி, இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா பந்துவீசுவார் என தொடருக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டபோதே அணி நிர்வாகம் தெளிவாக கூறியிருந்தது.
இப்போது ஏற்கெனவே அந்த 3 போட்டிகளில் விளையாடிவிட்டார் பும்ரா. முதல் போட்டியில் பந்துவீசிய அவருக்கு இரண்டாவது டெஸ்ட்டில் ஓய்வு கொடுக்கப்பட்டது. மூன்றாவதில் பந்துவீசிய அவர், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆகாஷ் தீப் காயம் காரணமாக 4வதிலும் கலந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

தொடரில் இங்கிலாந்து முன்னிலை வகிப்பதனால், இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. சமன் செய்வதற்கே அடுத்த போட்டியை வெல்ல வேண்டியது அவசியம் என்னும் நிலையில், அணி நிர்வாகம் அவர்களது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து விலகி பும்ராவை களமிறக்குவார்களா என்பதே அனைவருக்கும் எழுந்த கேள்வி.
இதுகுறித்து கேப்டன் கில்லிடம் நேரடியாக கேட்கப்பட்டபோது, ``நாங்கள் போட்டிக்கு முன்னதாக தான் அந்த முடிவை எடுப்போம். விக்கெட் (பிட்ச்) பச்சை நிறத்தில் தெரிகிறது... எனவே பார்க்கலாம்" என பதிலளித்தார்.
காயம் கரணமாக 4வது டெஸ்டில் விளையாடாமலிருந்த அர்ஷ்தீப் சிங், இந்த போட்டியில் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்பதை கில் பகிர்ந்தார். "பிட்சைப் பொருத்து நாளைதான் முடிவு செய்வோம்" என்றார்.

இந்தியாவின் பவுலிங் லைன்-அப் உறுதி செய்யப்படாமல் இருக்கும் சூழலில், பேட்டிங்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியுள்ள சூழலில் துருவ் ஜுரெல் அவருக்கு பதிலாக பேட்டிங்கில் களமிறங்கவுள்ளார்.
இங்கிலாந்து பிரதான ஸ்பின்னர்கள் இல்லாமல் களமிறங்கும் சூழலில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களான ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரண்டு ஸ்பின்னர்களும் ஆட்டத்தில் இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார் கில்.
பவுலிங்கைப் பொருத்தவரையில் சிராஜ் களமிறங்குவது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்ஷுல் கம்போஜ்-க்கு வாய்ப்பு குறைவு. மீதமுள்ள இரண்டு வேகப்பந்துவீச்சாளர் இடத்துக்கு பும்ரா, ஆகாஷ், அர்ஷ்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய நான்குபேர் இருக்கிறார்கள்.
இன்று ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது கடைசி டெஸ்ட் போட்டி. இதுவரை அங்கு நடந்த 15 போட்டிகளில் 2ல் மட்டும்தான் இந்தியா வெற்றிபெற்றிருக்கிறது. முதலாவது 1971ல், இரண்டாவது 2021ல்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...