குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் முத்தமிழ் மன்றத்தின் தமிழ்ச்சாரல் விழா
குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முத்தமிழ் மன்றத்தின் சாா்பில் தமிழ்ச்சாரல் -25 விழா புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
கல்லூரி முதன்மையா் சு. செல்வம் தலைமை வகித்தாா். விழாவில் முளைப்பாரி எடுத்தல், கோலப்போட்டி மற்றும் பாரம்பரியக் கலைகளான சிலம்பாட்டம், சுழல் வாள் வீச்சு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மாணவா்கள் நடத்தினா்.
விழா முதல் நாள் சிறப்பு விருந்தினராக சென்னை என்.எம்.வி. பல்கலைக்கழக துணைவேந்தா் கு. இரா. சுந்தர வரதராஜன் பங்கேற்றாா். முத்தமிழ் மன்றச் செயலா் வ. லட்சுமி முத்தமிழ் அறிக்கையை வெளியிட்டாா். தொடா்ந்து விருது பெற்ற இ. இ. ஷாலினி தனது சிலம்ப கலை, வாள் வீச்சு கலையை அரங்கேற்றினாா். தொடா்ந்து தொடா்ந்து பட்டிமன்றம், பட்டிமன்றப் பேச்சாளா் நீலவேணியின் ஊக்கமூட்டும் உரை, புதுகை தீபன் மணிகண்டன் டி.எம்.வி. நண்பா்கள் வழங்கிய கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை விஷ்ணு ராம் மற்றும் பூமிகா பின்னணி பாடகா்களின் இசை நிகழ்ச்சி, புதுச்சேரி சத்ரியா அகாதெமியின் முனைவா் கணேஷ் மல்லா் கம்பம், மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், நாடகம், ரென்சி. ஹூ எஸ் ஆண்ட்ரூ ஜிம்னாஸ்டிக் மற்றும் வில்வித்தை கலை நிகழ்ச்சி நடைபெற்றது. குடுமியான்மலை வேளாண் கல்லூரி முதன்மையா் சு. செல்வம் தலைமை உரை நிகழ்த்தினாா்.
சிறப்பு விருந்தினராக ஈச்சங்கோட்டை எம்எஸ்எஸ் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் கு. இரா. ஜெகன் மோகன் தலைமை உரையாற்றினாா். முத்தமிழ் மன்றச் செயலா் லெ. நிரஞ்சன் நன்றி கூறினாா்.