பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு! நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது பாக்.!
உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அரையிறுதிப் போட்டி கைவிடப்படுவதாகவும் பாகிஸ்தான் நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் முன்னாள் வீரர்களுக்கான உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகின்றது.
இந்த தொடரின் லீக் ஆட்டத்திலேயே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாக ரெய்னா, தவான், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் அறிவித்தனர்.
இதனால், அந்த போட்டி கைவிடப்பட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கும் நான்காம் இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கும் இடையே இன்று அரையிறுதிப் போட்டி நடைபெறவிருந்தது.
ஆனால், இந்திய அணியின் வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் முடிவை மதித்து போட்டியை கைவிடுவதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதேபோல், பாகிஸ்தான் அணி விளையாடத் தயாராக இருந்ததால், அவர்கள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.