12,000 பேர் பணிநீக்கம்! திறன் குறைபாடு காரணமா? - டிசிஎஸ் விளக்கம்
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே தொழில்நுட்ப வளர்ச்சி குறிப்பாக செய்யறிவு தொழில்நுட்பம் வளர்ந்துவரும் நிலையில் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பாக ஐடி ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கம், மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளது.
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு நேர்காணலில் பேசும்போது,
"நிறுவனத்தின் இந்த முடிவினால் உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களில் 2% பேரை பாதிக்கும். இதற்கு செய்யறிவு காரணம் அல்ல. செய்யறிவு, சுமார் 20 சதவீத உற்பத்தித்திறன் ஆதாயங்களை வழங்குகிறது. ஆனால் பணி நீக்கத்திற்கு அது காரணமல்ல. திறன்கள் பொருத்தமில்லாத சில சூழ்நிலைகளில் சிலரை பணியமர்த்த முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்த பணிநீக்கம் உடனடியாக செயல்படுத்தப்படாது. 2026 ஆண்டு முழுவதும் படிப்படியாக நடைபெறும். முதலில் பணிநீக்கம் செய்யப்படவுள்ளவர்களிடம் பேசுவோம். அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு வாய்ப்பை வழங்குவோம். தொடர்ந்து வாய்ப்புகளை வழங்க முடியாத சூழ்நிலையில் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்வோம்.
பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதை நிறுவனம் உறுதி செய்கிறது. அதாவது அறிவிப்பு காலம்(நோட்டீஸ் பீரியடு), அதற்கான ஊதியம், பணிநீக்க கூடுதல் பலன்கள், காப்பீட்டுத் தொகை நீட்டிப்பு, வேறு நிறுவனங்களில் பணியமர்த்த உதவி மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கப்படும்' என்று கூறினார்.