மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு: மறுஆய்வு மனு ஆகஸ்ட்டில் விசாரணை!
புது தில்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க அல்லது நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் காலக்கெடு விதிக்கப்படுமா?
மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் ஏப்ரல் 8-இல் அளித்த தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் அடுத்த மாதம் விசாரணை தொடங்குகிறது.
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பதில் ஆளுநா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், காலக்கெடு மற்றும் வழிமுறைகளை வகுத்தது. அதன்படி,
மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநா் முடிவு எடுக்க வேண்டும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால், அதை 3 மாதங்களுக்குள் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக மசோதாக்களை ஆளுநா் அனுப்பிவைத்தால், அவை குறித்து குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்.
மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை எழுத்துபூா்வமாக பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு குடியரசுத் தலைவா் தெரிவிக்க வேண்டும்.
மசோதாக்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளது என்று கருதினால், மிகுந்த கவனத்துடன் செயல்படும் விதமாக, அதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை குடியரசுத் தலைவா் கோரலாம்.
மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்தால், அவரின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை மாநில அரசுகள் அணுகலாம்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, மாநில அரசுகளால் கொண்டுவரப்படும் மசோதாக்கள் அந்தந்த மாநிலத்துக்கான ஆளுநர்களிடம் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பப்படும்போது, அவற்றுக்கு உரிய கால அவகாசத்துக்குள் ஆளுநர்களும் அதேபோல குடியரசுத் தலைவருக்கு ஆளுநர்களால் பரிசீலனைக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரும் உரிய கால அவகாசத்துக்குள் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தால் ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இவ்விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வு முன் விரிவான விசாரணை நடத்தி மறு ஆய்வு செய்ய அரசமைப்புச் சட்டப்பிரிவு 143-இன் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இதன் விசாரணை ஆகஸ்ட் 19-இல் தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(ஜூலை 29) தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் தலைமையில் சூர்ய காந்த், விக்ரம் நாத், பி. எஸ். நரசிம்ஹா, ஏ. எஸ். சந்தூர்கர் நீதிபதிகள் அமர்வு முன் மறு ஆய்வு மனு விசாரணைக்கு வருகிறது.
குடியரசுத் தலைவரின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தமிழ்நாடு, கேரள மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன. இவ்விவகாரத்தில் இவ்விரு எதிர்தரப்புகளிடமிருந்தும் சமர்ப்பிக்கப்படும் வாதங்கள் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.