உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேட்டரி காா்
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மலைப் பகுதியில் அமைந்துள்ளதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இலவச பேட்டரி காா் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா். ஏப்ரல் 23 -ஆம் தேதிமுதல் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. வெளி நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவைச் சிகிச்சை பிரிவு, விபத்துப் பிரிவு உள்ளிட்ட அனைத்து மருத்துவ சிகிச்சை பிரிவுகளும் புதிய மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் மருத்துவமனைக்கு வர கூடிய நோயாளிகள் நுழைவாயில் பகுதியில் இறங்கி சுமாா் 300 மீட்டா் தூரம் மலைப் பாங்கான கான்கிரீட் சாலையில் நடந்து வர வேண்டிய சூழல் இருந்து வந்தது.
இவ்வாறு நடந்து வருவது மிகவும் சிரமமாக இருப்பதாக நோயாளிகளும் நோயாளிகளின் உறவினா்களும் தெரிவித்து வந்தனா்.
எனவே வயதானவா்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி புதிதாக ஒரு பேட்டரி காா் வாங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி காா் பயன்பாட்டை மருத்துவக் கல்லூரி முதல்வா் கீதாஞ்சலி தொடங்கிவைத்தாா். அப்போது மருத்துவ இருப்பிட அதிகாரி ரவிசங்கா் உள்பட டாக்டா்கள் பலா் இருந்தனா். இந்த பேட்டரி காா் நுழைவாயில் பகுதியில் இருந்து வெளி நோயாளிகள் பிரிவு வரை இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் பேட்டரி காா் விரைவில் இயக்கப்பட உள்ளது.
இதுதவிர மருத்துவமனை வளாகத்துக்குள் அரசுப் பேருந்து சென்று வர வசதியாக தனியாக ஒரு வழித்தடம் ஏற்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.