Digital arrest scam: 3 மாதத்தில் ரூ.19 கோடி இழந்த டாக்டர்.. வங்கி கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி
பணமோசடி, போதைப்பொருள் வழக்குகளில் சிக்கி இருப்பதாக கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுவதாக மிரட்டி, முதியவர்கள், பெண்களிடம் சைபர் கிரிமினல்கள் பணம் பறித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய அரசு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டாலும், சைபர் கிரிமினல்களில் மக்கள் வலையில் தொடர்ந்து சிக்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்த வரிசையில் இப்போது குஜராத் பெண் டாக்டர் ஒருவரும் சிக்கி இருக்கிறார்.

குஜராத், காந்திநகரைச் சேர்ந்த அந்த மூத்த பெண் டாக்டருக்கு முதல் முறையாக கடந்த மார்ச் 15-ம் தேதிதான் மர்ம நபர் ஒருவர் போன் பண்ணி உங்களது போனில் ஆட்சேபகரான தகவல் இருப்பதாகவும், உங்களது போன் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், உங்கள் மீது பணமோசடி சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டினார்.
அந்த போன் காலை தொடர்ந்து அடுத்தடுத்து சப் இன்ஸ்பெக்டர், அரசு வழக்கறிஞர் என ஒவ்வொருவராக போன் செய்து பேசினர். இறுதியில் பெண் டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்து இருப்பதாக தெரிவித்தனர்.
எங்கு சென்றாலும் தங்களிடம் வீடியோ காலில் தொடர்பில் இருக்கவேண்டும் என்று மிரட்டினர். அதோடு விசாரணை என்ற பெயரில் பெண் டாக்டரின் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை தாங்கள் சொல்லும் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர்.
பெண் டாக்டரும் தனது வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை கடந்த மூன்று மாதத்தில் 35 வங்கிக்கணக்குகளுக்கு ரூ.19 கோடியை அனுப்பி வைத்தார். அப்படி இருந்தும் தங்க நகைகளை அடமானம் வைத்து பணத்தை டெபாசிட் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அதையும் பெண் டாக்டர் செய்தார். திடீரென சைபர் கிரிமினல்கள் பெண் டாக்டருடனான தொடர்பை துண்டித்துக்கொண்டனர்.
அதன் பிறகுதான் இது குறித்து அந்த டாக்டர் தனது உறவினரிடம் தெரிவித்தார். அவரது உறவினர் இது மோசடி என்று தெரிவித்தார். உடனே இது குறித்து சைபர் பிரிவு போலீஸில் பெண் டாக்டர் புகார் செய்தார். போலீஸார் அதிரடியாக விரைந்து செயல்பட்டு தீவிர விசாரணை நடத்தினர்.

மூன்று மாதம் பெண் டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.19 கோடி பறிக்கப்பட்ட இந்த சம்பவம்தான் இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் கைதாக கருதப்படுகிறது. இம்மோசடியில் தொடர்புடைய நபர் ஒருவர் சூரத்தில் கைது செய்யப்பட்டார். அவரது வங்கிக்கணக்கில் ஒரு கோடி ரூபாய் இருந்தது.
அவரிடம் இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் கிரிமினல்கள் அடுத்தவர்களின் வங்கிக்கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி செய்யப்பட்ட பணத்தை அதில் வரவைக்கின்றனர். இதற்காக வங்கி கணக்கு உரிமையாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு கமிஷன் கொடுக்கின்றனர். ஆனால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கும் அதிகாரத்தை சைபர் கிரிமினல் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கின்றனர்.