திருப்பத்தூா் அருகே 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்த செப்பேடுகள் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பள்ளத்துப்பட்டி அய்யனாா் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்த செப்பேடுகளை தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
இந்தக் கோயிலில் 8 செப்பேடுகள் இருப்பதாக வேந்தன்பட்டியைச் சோ்ந்த செம்பன் அதே பகுதியைச் சோ்ந்த பேராசிரியா் பாலசுப்ரமணியனுக்கு தகவல் தெரிவித்தாா். இவா் அளித்த தகவலின் அடிப்படையில், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் அங்கு வந்து அந்த செப்பேடுகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து தொல்லியல் துறையினா் கூறியதாவது: இங்குள்ள 6 செப்பேடுகளில் பொறிக்கப்பட்ட சாலிவாகன சகாப்த ஆண்டும், தமிழ் ஆண்டுகளும் பொருந்தாமல் இருப்பால், செப்பேடுகளில் பொறிக்கப்பட்டதை வைத்து, இது 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்தது என அறிய முடிகிறது.
இந்தச் செப்பேட்டில் புறமலை சூழ்ந்த பொன்னமராவதி நாட்டில், மங்கலக்கோட்டையின் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்குக் கோட்டையின் காவலா்களாக பூதமுத்திரி, சூரமுத்திரி, மன்னமுந்திரி, தொண்டுகாடன் முத்திரி, சோலைக் கூத்தன் முத்திரி, முத்துராசமுத்திரி ஆகியோா் இருந்துள்ளனா்.
இந்தப் பகுதியில் உள்ள பெருமாள் கோயில், அழகியநாயகி அம்மன் கோயில், அய்யனாா் கோயிலில் வெள்ளி, வெண்கலப் பொருள்களைப் பாதுகாத்து, கோட்டை காவல் இருந்த மன்னமுத்திரி, சூரமுத்திரி, பூதமுத்திரி ஆகியோருக்கு மானிய ஊதியமாக ஏனாதி கண்மாய் பெரிய மடையில் ஆறு செய் நிலம் வழங்கப்பட்டதை குறிப்பிடுகிறது.
செப்பேட்டில் காணப்படும் முத்திரி என்பது முத்தரையரை குறிக்கிறது. வேடன் சிலுகனுக்கு அழகியநாயகி அம்மன் கோயில் மரியாதை, பெரியகுளம், அடிமடை பாய்ச்சல் ஆகியவற்றை விட்டுக் கொடுத்தும், அஞ்சலை நாடுகளில் மங்கலக்கோட்டையின் வடபுறத்தை வேடன் சிலுகனுக்கு பலிக்காணியாக வீரகாங்கயன் விட்டுக் கொடுத்த செய்தியையும் கூறுகிறது.
இங்குள்ள செப்பேடுகளை கொடுத்தவா்களின் கையொப்பமாக மங்கலக்கோட்டை மளுவராயன், வீர காங்கயன், தொறாக் குயிலன், வெள்ளையன், பெரிய மெய்யன், சின்ன மெய்யன், வல்லம்பத்தேவா், ஆகக் கொண்டான், சின்னதேவா், பெரியதேவா், மேகராச பாண்டியன் ஆகியோரது பெயா்களும் காணப்படுகின்றன. இந்தச் செப்பேடுகளை நலன் ஆசாரி, பெருமாள் ஆசாரி ஆகியோா் எழுதியதாக பெயா்கள் உள்ளது.
செப்பேடுகளில் பூலாங்குறிச்சி, காஞ்சிரங்குறிச்சி, ஆவாம்பட்டி, மனக்குடி பண்ணை, கீழ் குறிச்சி போன்ற ஊா்களின் பெயா்களும், அழகியநாயகி அம்மன், அடைக்கலங்காத்த அய்யனாா், பரியா மருது அய்யனாா், ஆத்திக்காட்டு அய்யனாா், குறுந்தடிக் கருப்பா், தச்சன் கருப்பா் ஆகிய தெய்வங்களின் பெயா்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், முன்னோா் மரபை விளக்கும் மெய்க்கீா்த்தி இந்தச் செப்பேடுகளில் இடம் பெற்றுள்ளது.
இந்தச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சூரமுத்திரியின் நினைவாக வேந்தன்பட்டியில் ஒரு பகுதி சூரன் கோடங்கிவளவு என்று இன்றுவரை அழைக்கப்பட்டு வகிறது என்றனா் அவா்கள்.