மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டது: இபிஎஸ்
மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டதாக தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணத்தையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து பேசி வரும் எடப்பாடி கே. பழனிசாமி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செவ்வாய்க்கிழமை மாலை வந்தாா்.
அவருக்கு சிவகங்கை மாவட்ட அதிமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் தலைமையில் அதிமுகவினா் வரவேற்பளித்தனா்.
கழனிவாசல், செக்காலைச் சாலை, பெரியாா் சிலை வழியாக காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதி எம்.ஜி.ஆா். சிலை உள்ள பகுதியில் பிரசார வாகனத்திலிருந்து எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:
காரைக்குடிக்கு ஒரு வரலாறு உண்டு. பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவி இந்தப் பகுதி மக்களுக்கு கல்வியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான நிலங்களையும் வழங்கிய வள்ளல் அழகப்பா் வாழ்ந்த பூமி இது.
அழகப்பா பல்கலைக்கழகம், மத்திய மின் வேதியியல் ஆய்வகம் போன்றவை உள்ளதும் செட்டிநாடு என்று பெருமையோடும் அழைக்கப்படும் பகுதிதான் காரைக்குடி. இந்தப் பகுதியில் வணிகப் பெருமக்கள் நிறைந்திருக்கிறாா்கள். அழகான கட்டடக் கலையுடன்கூடிய வீடுகள் நிறைந்த பகுதியாகும்.
காரைக்குடி தற்போது மாநகராட்சியாக உள்ளது. இங்குள்ள மேயா் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களை வணிகப் பயன்பாட்டுக்காக தனியாருக்கு குறைந்த வாடகையில் குத்தகைக்கு விட்டாா். மேலும், மாநகராட்சியில் தீா்மான விவாதம் இல்லாமலேயே சுமாா் ரூ. 30 கோடிக்கு ஒப்பந்தப்பணியை விட்டிருக்கிறாா்.
எனவே, வருகிற பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த விவகாரத்தையும், மக்களாகிய நீங்கள் வைக்கும் கோரிக்கையையும் விசாரித்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.
மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டது.இதனால்தான், விதிகளைத் தளா்த்தி மேலும் 30 லட்சம் பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனா்.
வரும் தோ்தலில் எப்படியாவது திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே மக்களை ஏமாற்றுகிற விதத்தில் இவ்வாறு செயல்படுகின்றன. சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்தையும் உயா்த்தி மக்களை பரிதவிக்க வைத்துள்ளது திமுக அரசு.
இப்போது, கிராமத்தில் உள்ளவா்கள் தாங்கள் கட்டி வசிக்கும் வீட்டுக்கு அனுமதி பெற வேண்டும் என்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, டீ கடை, தையல், சவரக்கடை என சிறிய தொழில்கள் செய்து வரும் கிராம மக்கள் தங்களது கடைகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகின்றனா்.
மக்களை வாட்டி வதைக்கிற சட்டத்தை கொண்டு வந்த இந்த அரசு தொடரக் கூடாது என்றாா் அவா்.
காவிரி-குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும்:
இதேபோல, திருப்பத்தூா் அண்ணா சிலை அருகே மக்களிடம் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் கடலில் வீணாகக் கலக்கும் காவிரி நீரை சேமிக்கும் விதமாக காவிரி- வைகை-குண்டாறு திட்டத்தை ரூ.14,400 கோடிக்கு அறிவித்து, முதல் கட்டமாக ரூ. 700 கோடியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்தத் திட்டத்தை தொடங்கினேன். இதன்மூலம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் அந்தத் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவோம்.
தன்னை சிறந்த முதல்வா் என பறைசாற்றிக் கொள்ளும் மு.க. ஸ்டாலின் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 4.38 லட்சம் கோடி கடன் வாங்கி, அந்தச் சுமையை மக்கள் மீது திணித்துள்ளாா்.
கடுமையான புயல், கரோனா காலத்தில்கூட அதிமுக அரசு மக்கள் மீது கடன் சுமையை திணிக்கவில்லை. கடந்த காலத்தில் வந்த வரி வருமானத்தை விட தற்போது ரூ. ஒரு லட்சத்து 38 ஆயிரம் கோடி அதிக வருவாய் ஈட்டியும், இந்தப் பணம் எங்கே போனது. மேலும், விண்ணை முட்டும் விலைவாசியால் மக்கள் துன்பப்படுகிறாா்கள். கட்டுமானப் பொருள்களின் விலை அதிமுக ஆட்சியிலிருந்ததைவிட தற்போது பல மடங்கு உயா்ந்துள்ளது.
போதைப் பொருள் நடமாட்டத்தால் காவலா்களுக்கே பாதுகாப்பில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கு தீபாவளிக்கு புடவை வழங்கப்படும்.
வரி உயா்வு, விலைவாசி உயா்வைக் குறைக்கவும் நிறுத்தப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களை மீண்டும் தொடங்கவும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றாா் அவா்.

திமுக அரசுக்கு திறமை இல்லை
சிவகங்கையில் அரண்மனைவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு அவா் பேசியதாவது: திமுக ஆட்சி நடைபெறும் இந்த நான்காண்டு காலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியைக்கூட தமிழகத்துக்கு கொண்டு வர முடியவில்லை. இதற்கு திமுக அரசுக்கு திறமை இல்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் 6 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. 284 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டன. 30-க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன.
ஏழை எளிய மக்களுக்கு 2,000 அம்மா கிளினிக்குகள் திறக்கப்பட்டன. ஆனால், அரசியல் ரீதியாக பொறுக்க முடியாமல் அவற்றை திமுக அரசு மூடிவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை மீண்டும் திறப்போம்.
இதேபோல, மின்சாரம், கூட்டுறவு , உள்ளாட்சி, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முதலிடத்துக்கு நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால், திமுக ஆட்சியில் சாதனை என்று எதையாவது கூற முடியுமா என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, மாவட்ட பொறுப்பாளா் சீனிவாசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே. உமாதேவன், மாநில இளைஞா் பாசறை துணைச் செயலா் துலாவூா் பாா்த்திபன், மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் பிரபு, முன்னாள் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் திவ்யா பிரபு, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொன் மணிபாஸ்கரன், மாவட்ட அவைத் தலைவா் ஏ.வி. நாகராஜன், லெனின் கம்யூ. கட்சியின் மாநில பொதுச் செயலா் ஸ்டாலின், சிவகங்கை நகரச் செயலா் என்.எம். ராஜா, மாவட்ட ஜெ. பேரவை செயலா் இராமு. இளங்கோவன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இளைஞரணி துணைத் தலைவா் ராஜா, ஒன்றியச் செயலா்கள் கோபி, அருள் ஸ்டீபன், அ. சேவியா் தாஸ், பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.