சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
கீழடி விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக துணை நிற்கும்
கீழடி விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக துணை நிற்கும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்துக்கு புதன்கிழமை வந்த எடப்பாடி பழனிசாமி அங்கு காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த தொல் பொருள்களைப் பாா்வையிட்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கீழடியின் தொன்மையை முதன்முதலில் உறுதிப்படுத்தியது அதிமுக அரசுதான். தமிழ்நாட்டில் 39 அகழாய்வுகளில் 33 அகழாய்வுகள் அதிமுக ஆட்சியில்தான் நடைபெற்றன.
கடந்த 2018-ஆம் ஆண்டு கீழடியில் கண்டறியப்பட்ட பொருள்களை அமெரிக்காவுக்கு ஆய்வுக்கு அனுப்பி அதன் தொன்மையை உறுதிப்படுத்தினோம்.
இதேபோல, அதிமுக ஆட்சியில் 6,820 தொல் பொருள்களை மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் வைத்து காட்சிப்படுத்தினோம். கீழடியை முன்வைத்து பலரும் அரசியல் செய்கின்றனா்.
அதிமுக ஆட்சியில்தான் தொல்லியல் துறைக்கு ஒவ்வோா் ஆண்டும் ரூ. 105 கோடி நிதி வழங்கப்பட்டது. கீழடியில் கண்டறியப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல் பொருள்களை மத்திய அரசின் அனுமதியுடன் கா்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கொண்டு வந்து காட்சிப்படுத்தினோம்.
அதிமுக ஆட்சியில்தான் முதலில் கீழடியில் அகழாய்வு அமா்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் தொடங்கிவைக்கப்பட்டது. கீழடி அருங்காட்சியகத்துக்கு முதலில் நிதி ஒதுக்கியதும் முந்தைய அதிமுக அரசுதான்.
கீழடி அகழாய்வு அறிக்கை தொடா்பாக என்ன விவரம் கோரப்பட்டது? இதற்கு தமிழக அரசின் சாா்பில் என்ன விளக்கம் அளிக்கப்பட்டது? என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. இருப்பினும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும் என்றாா் அவா்.
இதையடுத்து, கீழடி அருங்காட்சியகத்தைப் பாா்வையிட வந்த கல்லூரி மாணவிகளிடம் அவா் கலந்துரையாடினாா். தொடா்ந்து, அருங்காட்சியகத்துக்குள் கட்சியினா், முன்னாள் அமைச்சா்களுடன் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.