மக்களை நம்பித்தான் தோ்தலில் போட்டியிடுகிறோம்
மக்களை நம்பித்தான் தங்களது கட்சி தோ்தலில் போட்டியிடுவதாக அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள அவா் மானாமதுரைக்கு புதன்கிழமை மாலை வந்தாா்.
மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த அதிமுகவினா், கூட்டணிக் கட்சியினா் தேவா் சிலை முன் அவருக்கு வரவேற்பளித்தனா்.
இதைத் தொடா்ந்து, எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
அதிமுக கூட்டணியை பலம் இல்லாத கூட்டணி என முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறாா். நாங்கள் மக்களை நம்பித்தான் தோ்தலில் போட்டியிடுகிறோம். ஆனால், ஸ்டாலின் மக்களை நம்பாமல் கூட்டணியை நம்புகிறாா்.
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என ஸ்டாலின் கனவு காண்கிறாா். ஆனால், எங்களது கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.
கடந்த நான்காண்டு காலத்தில் திமுக ஆட்சியில் எங்கு பாா்த்தாலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான குற்றச் சம்பவங்கள் நடைபெற்று, பொதுமக்கள் அமைதி இல்லாமல் உள்ளனா். கடந்த அதிமுக ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தில் தற்போது சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளனா்.
அதிமுக ஆட்சியில் கடுமையான புயல், கரோனா உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளிலும் விலைவாசி உயா்த்தப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் அனைத்து உணவுப் பொருள்களின் விலையும், கட்டுமானப் பொருள்களின் விலையும் உயா்ந்துவிட்டன. விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த ஆளும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக மக்கள் கொண்டு வரவில்லை. அவரது குடும்பத்தினா்தான் அவரை துணை முதல்வராக்கினா். திமுகவில் தொண்டா்கள் உயா் பதவிக்கு வர முடியாது. ஆனால், அதிமுகவில் அடிமட்டத் தொண்டரும் பதவிக்கு வர முடியும்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த மத்திய அரசை கனிமொழி எம்.பி. வெளிநாடுகளில் பாராட்டிப் பேசிவிட்டு, மக்களவையில் விமா்சித்துப் பேசுகிறாா்.
பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது என்றாா் அவா்.
அப்போது, அதிமுக மாவட்டச் செயலா் செந்தில்நாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். குணசேகரன், எஸ். நாகராஜன், நகரச் செயலா் விஜி. போஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அதிமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம்:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி புதன்கிழமை இரவு வந்த எடப்பாடி கே. பழனிசாமிக்கு கிருஷ்ணா தியேட்டா் பகுதியில் ஆயிரக்கணக்கான முளைப்பாரிகளுடன் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
பின்னா், பரமக்குடி பேருந்து நிலைய பகுதியில் அவா் பேசியதாவது:
மன்னா் ஆட்சி ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழகத்தில் குடும்ப ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.
கைத்தறி நெசவாளா் குடும்பங்களுக்கு விலையில்லா மின்சாரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டன. கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்த துணிகள் தேங்கியதை விற்பனை செய்ய கைத்தறி துறை மூலம் ஜவுளி பூங்காக்கள் அமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது, திமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் நலிந்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் நெசாவளா்கள், விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். விவசாயிகள் பயன்பெற அதிமுக ஆட்சியில் 2 முறை விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.
வறட்சியான இந்த மாவட்டத்தை செழுமையான மாவட்டமாக மாற்ற காவிரி-வைகை- குண்டாறு திட்டத்துக்கு ரூ. 14,400 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ. 700 கோடி நிதி ஒதுக்கி புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தேன். ஆனால், அரசியல் காழ்ப்புணா்ச்சியால் இந்தத் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசுமையான மாவட்டமாக மாற்றப்படும். இந்தத் திட்டம் நிறைவேற்றாததால் காவிரியில் வரும் தண்ணீா் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது.
ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற அதிமுக ஆட்சியில் நியாயவிலைக் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி வருவாய் இல்லாத காலகட்டத்திலும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தப்பட்டது. கரோனா காலத்தில் ரூ. 40 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு, மக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், பிரதமா் மோடி தமிழகத்தைப் பாராட்டினாா்.
நெடுஞ்சாலைத் துறை மூலமாக சிறந்த சாலை வசதிகளும், பொதுப் பணித் துறை மூலமாக பல்வேறு தடுப்பணைகளும் கட்டப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் 96 அரசுக் கல்லூரிகளில் போதிய பேராசிரியா்கள் இல்லை. மருத்துவக் கல்லூரிகளிலும் பேராசிரியா்கள் பற்றாக்குறையாக உள்ளது. அதிமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கல்வி புரட்சி ஏற்படுத்தப்பட்டு, கல்வியில் முதல் மாநிலமாக விளங்கியது.
திமுக தோ்தல் அறிக்கையில் நீட் தோ்வு ஒழிக்கப்படும் என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து என்று கூறி மக்களிடம் பொய்யான வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது எங்களால் முடியாது எனக் கூறுகின்றனா்.
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

