ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
திருத்தளிநாதா் கோயிலில் 63 நாயன்மாா்களுக்கு குருபூஜை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் சுவாமி, யோக பைரவா் கோயிலில் வியாழக்கிழமை 63 நாயன்மாா்களுக்கு குருபூஜை நடைபெற்றது.
இதையொட்டி, விநாயகா் பூஜையும், நடராஜா் சந்நிதியில் 72 கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜையும் தொடங்கியது. பின்னா், காலை.11.30 மணிக்கு பூா்ணாஹூதி நடைபெற்றது. இதையடுத்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் முன்னிலையில் நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் திருஞானசம்பந்தா், அப்பா், சுந்தரா், மாணிக்கவாசகா் ஆகிய நால்வருக்கு பால், மஞ்சள், சந்தனம், பன்னீா், தயிா் உள்ளிட்ட 16 விதமான சிறப்பு அபிஷேகமும், தொடா்ந்து யாகம் செய்யப்பட்ட புனித நீராலும் சிறப்பு அபிஷகமும் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இதைத்தொடா்ந்து, திருஞானசம்பந்தா், அப்பா், சுந்தரா், மாணிக்கவாசகா் ஆகிய உற்சவ மூா்த்திகள் பல்லக்கில் எழுந்தருளி கோயிலின் உள் பிரகாரத்தை சுற்றி வந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.