மரங்களை வெட்டியதைக் கண்டித்து சாலை மறியல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்புவனத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட பழைய கட்டடம் இடிக்கப்பட்டது. அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கின. அங்கிருந்த பழைமையான மரங்களை வெட்டி அகற்றாமல் கட்டடப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், கட்டடம் கட்டுவதற்காக மரங்களை வெட்டும் பணி தொடங்கப்பட்டது. இதைக் கண்டித்து
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடத்தினா். இதில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் நிருபன் பாசு, ஒன்றியச் செயலா் முத்துராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஜெயராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கலந்து கொண்டனா். பின்னா், போலீஸாா் சமாதானம் செய்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
